மூடு

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மின்மோட்டாருடன் கூடிய இலவசத் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2022

செ.வெ.எண்:-14/2022

நாள்:-06.01.2022

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மின்மோட்டாருடன் கூடிய இலவசத் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2021-22-ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்குவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சேர்ந்த பயனாளிகள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1,00,000/- ஆக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை. விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்;களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.