மூடு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர்,மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(31.03.2022) நேரில் பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2022
.

செ.வெ.எண்:-63/2022

நாள்:31.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர்,மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(31.03.2022) நேரில் பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(31.03.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் திரு.எஸ்.காந்திராஜன், அவர்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.பூண்டி கே.கலைவாணன், அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.ம.சிந்தனை செல்வன், அவர்கள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர், திரு. கே.மாரிமுத்து, அவர்கள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திருமதி கு.மரகதம் குமாரவேல், அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர், திரு.எஸ்.சுதர்சனம், அவர்கள், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு இணைச்செயலாளர் திருமதி பி.தேன்மொழி, அவர்கள், துணைச் செயலாளர் திருமதி பா.ரேவதி, அவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த குழுவினர், கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட நாயுடுபுரத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.52.90 கோடி மதிப்பீட்டில் கீழ்குண்டாறு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ரோஜா பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கொடைக்கானல் ரிச் பாய்ண்டில் உள்ள கீழ்குண்டாறு குடிநீர் அபிவிருத்தித் திட்ட கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டனர்.அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் நகராட்சி நகர்மன்ற கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில், தணிக்கை பத்திகள் மற்றும் சில திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானலில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையினர் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டிய குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, கொடைக்கானலில் இருந்து வெள்ளக்கேவி மலை கிராமத்திற்கு செல்ல 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று கொடைக்கானல் முதல் வெள்ளக்கேவி வரை தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு வனத்துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். எனவே, இந்தப் பகுதியில் சாலை அமைக்க முழு ஒப்புதலை 15 நாட்களில் வழங்க வனத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையான நடவடிக்கை மேற்கொண்டு, சாலைப்பணிகளை முழுமையாக அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கல்லூரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கொடைக்கானலில் மாஸ்டர் பிளான் இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்த குழு அமைக்கவும், அதற்கான சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரவும், சாலைகள் இல்லாத பகுதிகளுக்கு சாலைகள் அமைத்தல் பணிகள், வனக்குழுக்களை முறைப்படுத்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் குழுவினருடன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கொடைக்கானல் நகராட்சித்தலைவர் திரு.செல்லத்துரை, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன், நகராட்சி ஆணையாளர் திரு.நாராயணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.மாரியப்பன், நகராட்சி துணைத்தலைவர் திரு.கண்ணன், உள்ளுர் திட்டக் குழுமத் தலைவர் திரு.ரமேஷ்குமார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்(பொ) திரு.பாண்டியராஜன், கொடைக்கானல் ரோஜா பூங்கா மேலாளர் திரு.பார்த்தசாரதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.