மூடு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி/கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2022
.

செ.வெ.எண்:-43/2022

நாள்:24.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி/கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் உலக காசநோய் தின விழா இன்று(24.03.2022) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்; பங்கேற்று, உலக காசநோய் தினத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், உலக காசநோய் தினத்தையொட்டி செவிலியர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி/கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும். உலக காசநோய் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் கேடயம் பெறும் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

தமிழக அரசு 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசநோய் அறிகுறியாக ஆரம்பக்கட்டத்தில் இருமல், சளி, மாலைநேர காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் தங்களின் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ இலவசமாக சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். இதன்மூலம் முன்கூட்டியே காசநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.

காசநோயாளிகளுக்கு அரசு இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவதுடன், 6 மாதங்களுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.3000 என காசநோயாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காசநோய் இல்லா திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.த.கி.பாக்கியலட்சுமி, மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.ஜி.ரூபன்ராஜ், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர்(காசநோய்) மரு.எம்.இராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் மரு.பி.சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.