மூடு

திண்டுக்கல் மாநகராட்சி குமரன் பூங்கா திடலில் 75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.பல்வேறு அரசுத்துறை அரங்குகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2022

செ.வெ.எண்:-39/2022

நாள்:15.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி குமரன் பூங்கா திடலில் 75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.பல்வேறு அரசுத்துறை அரங்குகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் மாநகராட்சி திருப்பூர் குமரன் பூங்காவில் இன்று(15.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு திருப்பூர் குமரன் திடலில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியை திறந்து வைத்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு அரசுத்துறை அரங்குகளை திறந்து வைத்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா நன்றி தெரிவித்தார்.

இவ்விழாவில், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

75-வது சுதந்திரதினவிழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ளுர் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையிலும், சுதந்திரப்போராட்ட தியாகிகளை நினைவுகூறும் வகையில், சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாநகராட்சி குமரன் பூங்கா திடலில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா இன்று(15.04.2022) தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை சிறப்பிக்கும் வகையிலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூறும் வகையிலும் இந்த சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன் பெயரை நினைவுகூறும் வகையில் இப்பூங்காவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாமன்னர் திப்புசுல்தானும், வீரமங்கை வேலுநாச்சியாரும் சுதந்திரப் போராட்டத்திற்காக அவர்கள் தங்கியிருந்த பல்வேறு திட்டங்களை தீட்டிய மண் இந்த மண். திண்டுக்கல் திப்புசுல்தான் அரண்மனை அமைந்த மலைக்கோட்டையின் அருகில் இந்த அரங்கில் இவ்விழா நடத்தப்படுவது, மிகப்பொருத்தமான ஒன்று.இவ்விழாவில், அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், 18 துறைகளில் பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் இந்த மலைக்கோட்டையில்தான் தங்கி படையை அமைத்து பயிற்சி பெற்றனர். தியாகி சுப்பிரமணிய சிவா வத்தலகுண்டு பகுதியில் பிறந்தவர. அதேபோல் ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் பிறந்தவர் சுதந்திரப்போராட்ட வீரர் கோபால் நாயக்கர் ஆவார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுதந்திரப்போராட்ட தியாகிகள் உள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்து வருகிறார். இது மக்கள் அரசாங்கம். இந்த அரசாங்கத்திற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நம் முன்னோர்களை பெருமைப்படுத்தும் விதமாகவம், அவர்களை நினைவுகூறும் வகையில் 75-வது சுதந்திரதினவிழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி, திண்டுக்கல்லில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா தொடங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் கோபால் நாயக்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு, அங்கு அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கு மணிமண்டபங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான். அவர்கள் வழியில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது 150வது பிறந்த ஆண்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓராண்டில் திறக்கப்படும் அனைத்து அரசு கட்டடங்களுக்கும் வ.உ.சி. அவர்கள் பெயர் சூட்டப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுபோன்று நாட்டுக்காக பாடுபாட்ட தலைவர்கள் ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளனர். அவர்களின் பெருமைகளை அறிந்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடத்தப்படுகிறது.பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று உறுதியளிக்கிறேன் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.விழாவில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நமது முரசு நாளிதழ் செய்தியாளர் திரு.மு.அழகர்சாமி என்பவரின் குடும்பத்திற்கான ரூ.10 இலட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை அவரது மனைவி திருமதி அ.மகாலெட்சுமியிடம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

இந்தக்கண்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மை வணிகத்துறை, சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந் குழந்தை வளர்ச்சித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், ஊரக புத்தாக்கத் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பேரூராட்சிகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் மேம்பாடு, முன்னோடி வங்கி, சுற்றுலாத்துறை, ஆவின், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், காவல் துறை ஆகிய துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகளில் அந்தந்த துறைகளில் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் துறை அலுவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கண்காட்சி 21.04.2022 வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில், தினமும் மாலை 04.00 மணி முதல் பல்சுவை கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கண்காட்சியை காண நுழைவுக்கட்டணம் இல்லை. கண்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயர் திரு.எஸ்.ராஜப்பா, மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் திரு.பிலால்உஷேன், மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் திரு.ஆனந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.பெருமாள்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள். பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.