மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வேளாண்மை – உழவர் நலத்துறையின் செயலியை பயன்படுத்தி பெயர் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2023

செ.வெ.எண்:-34/2023

நாள்:-14.02.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வேளாண்மை – உழவர் நலத்துறையின் செயலியை பயன்படுத்தி பெயர் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் நோக்கத்தில் ஒரு செயலி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இது உழவன் செயலியில் ஒரு சேவையாக சேர்க்கப்பட்டுள்ளது.

வேளாண் கூலித்தொழிலாளர்கள் தங்களின் மாவட்டத்தை விட்டு பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதனை தவிர்த்து, உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், திறமையான தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், விவசாயிகள் விவசாய பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ள இச்செயலி உதவுகிறது. மேலும் விவசாய பணிகளுக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவும் செயல் ரீதியாக தொழிலாளர்களை தாமதமின்றி கண்டறியவும் இச்செயலி உதவுகிறது.

இச்செயலி குறித்த முக்கிய அம்சங்கள்:-

அனைத்து மாவட்டங்களும் இத்திட்டத்தில் அடங்கும். இச்செயலியில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை ஆகும். வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். வேளாண் தினக்கூலி, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த செயலி விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைக்கும். இச்செயலியில் ஒரே தளத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் திறமையான வேளாண் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை தக்க தருணத்தில் பயன்படுத்திக்கொள்ளுவதற்கும், விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் திறமையான தொழிலாளர்கள் நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு இடம் பெயராமல் இருப்பதற்கும் ஒரே தளத்தில் விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இணைவதால் விவசாயிகள் நேரடியாக கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனால் விவசாயிகள் எவ்வித இடர்பாடுமின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் இச்செயலி உதவுகிறது.

பதிவு செய்யும் முறை:-

விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் கைபேசி எண், ஆதார் எண் மற்றும் வங்கி புத்தகத்துடன் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

எனவே, வேளாண் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இந்த செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதியில் உள்ள வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.