திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தினார்.

செ.வெ.எண்:-22/2025
நாள்:-09.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2025) பரிசுகளை வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
உலக சுற்றுச் சூழல் தினம் 05.06.2025 அன்று மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மரக்கன்றுகள் நடுதல், விதை நடவு செய்தல், குறுங்காடுகள் அமைத்தல், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சுழல் விழிப்புணர்வு கட்டுரை. பேச்சு. ஓவிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலுள்ள அலுவலகங்களில் தூய்மை நடை பயணம் மேற்கொண்டு குப்பை சேகரித்தல், பிரித்தல், உள்ளூர் விற்பனையாளர்கள் மூலம் கழிவு நீக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதன் ஒரு கட்டமாக நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்துவரும் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் தொழிலாளர்களை பாராட்டி கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 35 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள். வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் உருவாகும் குப்பைகளை தூய்மை காவலர்கள் சேகரிக்கின்றனர். கிராம ஊராட்சிகளை தூய்மை படுத்தும் பணிகளில் 2,588 தூய்மை காவலர்கள் பணியமர்த்துபட்டு தூய்மை பணி செய்து வருகின்றனர்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை சமுதாய உரக்குழி, மண்புழு உரக்கூடம், நுண்ணுயிர் கூடங்கள் மூலம் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யதக்க பிளாஸ்டிக் பொருட்களை உள்ளுர் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.
வீடுகள், கடைகள், பொது இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அமைக்கப்பட்டுள்ள நெகிழி கழிவு மேலாண்மை அலகிற்கு கொண்டு செல்லப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் நெகிழி கழிவு மேலாண்மை அலகு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகிறது.
இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகுகள் ஊராட்சியில் பயன்பாடு இன்றி உள்ள கட்டிடங்கள் அல்லது புதிதாக கட்டமைக்கப்பட்ட கூடத்தில் செயல்படுகிறது. நெகிழி பைகளிலுள்ள கல், மண் போன்ற தூசிகளை அகற்ற எதுவாக தூசி நீக்கு இயந்திரம் ஒன்றும், நெகிழி பைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்க நறுக்கு இயந்திரம் ஒன்றும், நெகிழி பைகளை அளவீடு செய்ய எடை இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
நெகிழி கழிவு மேலாண்மை அலகில் நெகிழி பைகளை தூசி நீக்குதல், அரைத்தல், மூட்டை கட்டுதல், ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகளை செய்திட மூன்று முதல் ஐந்து தொழிலாளர்கள் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் நெகிழி பைகள் ஒரு கிலோ ரூ.10-க்கு நெகிழிக் கழிவு மேலாண்மை அலகில் கொள்முதல் செய்யப்படுகிறது. அரைக்கப்பட்ட நெகிழித் துகல்கள் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரைக்கப்பட்ட நெகிழி துகள்களில் பெரும்பாலும் தார் சாலை அமைக்க தாருடன் சேர்த்து பயன்படுத்த அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கான பெல்லட்டுகள், பேவர்பிளாக், தார் கட்டிகள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
2025-26ஆம் ஆண்டில் 4269 கிலோ மீட்டர் கிராம சாலைகள் அமைக்க 29.89-டன் நெகிழி துகள்கள் தேவையென கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12.635-டன் நெகிழித் துகள்கள் நெகிழி கழிவு மேலாண்மை அலகின் மூலம் தார் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4,42,225 வருவாய் கிடைத்துள்ளது.
மக்கும் குப்பை மூலம் உரம் தயாரித்து விற்பனை செய்து, மக்காத மறுசுழற்சி செய்யத்தக்க குப்பைகள் விற்பனை செய்யப்பட்டது. நெகிழி துகள்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியாக ரூ.1,49,305 வரை தூய்மைக் காவலர்களுக்கு கூடுதல் வருமானமாக / ஊக்கத் தொகையாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.ஜெ.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஆர்.குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.