மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான மியாவாக்கி காடுகளை உருவாக்க மாணவ, மாணவியர்கள் முன்வர வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட தேதி : 27/09/2021
.

செ.வெ.எண்:-50/2021

நாள்:-25.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான மியாவாக்கி காடுகளை உருவாக்க மாணவ, மாணவியர்கள் முன்வர வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் வேண்டுகோள்.

திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.காயத்திரி தலைமையில், அருட் தந்தை அர்னால்ட் மகேஷ் முன்னிலையில் இன்று(25.09.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் 355 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது மாநிலத்தில் அதிகமான மரங்கன்றுகளை நட்டு 33 சதவிகித காடுகள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் சுமார் 5 இலட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்திட திட்டமிடப்பட்டு அதாற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக குறைந்த இடங்களில் அதிகமான மரக்கன்றுகளை மியாவாக்கி காடுகள் மாதிரியாக நட்டு அதனை வளர்த்திட வேண்டும்.

2019-ம் ஆண்டு பரிசாத்தமாக இதுபோன்ற குறைந்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. நாங்கள் பள்ளி பருவத்தில் குடிநீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. ஆனால் தற்போது குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை நமது சமுதாயத்தில் உள்ளது.இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆக்ஸிசன் அளவு சில நேரங்களில் குறைந்து காணப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலை நமது மாநிலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிகமான மரங்கள் நடப்பட்டு வருகிறது. மரம் வளர்ப்பதில் நமது எண்ணத்தை மிகவும் உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மின்னலை மின் காந்த அலைகளைவிட நமது எண்ண அலைகள் மிகவும் வேகமானது. எனவே, மரம் வளர்ப்பதில் நமது எண்ண அலைகளை அதிகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கு ஆக்ஸிசன் பற்றாக்குறை இல்லை என்கின்ற நிலையினை உருவாக்கிட வேண்டும். நாம் வளர்க்கின்ற மரங்கள் அனைத்தும் நம் சந்ததியினருக்கு வாழ்வாதாரமாக அமைந்திட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நாம் மரங்களை உருவாக்கிட வேண்டும். நமது மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, இப்பணிகள் துவங்கப்பட்டது. வரும் 2 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மியாவாக்கி காடுகள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்ப்பது என்பதாகும். ஓவ்வொரு மியாவாக்கி காடுகளும் நமது மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமானது என்பது உணர்ந்து, அதிகமான மியாவாக்கி காடுகளை உருவாக்கி காடுகளை அதிகமாக உருவாக்கிய மாவட்டமாக மாற்றிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.