மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2022
.

செ.வெ.எண்:-44/2022

நாள்:24.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் பிவிகே கிரான்ட் ஹோட்டலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி இன்று (24.03.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சியை துவக்கி வைத்தார்.

புத்தாக்க பயிற்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நமது மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்கள் பகுதியிலுள்ள பெண்களிடம் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாதவாறு பாதுகாக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் 24 சதவீதம் குழந்தைகள் சராசரி உயரத்தை விட உயரம் குறைவாகவும், 5 சதவீதம் குழந்தைகள் எடை குறைவாகவும், 3 சதவீதம் குழந்தைகள் மிகவும் மெலிந்த குழந்தைகளாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நீங்கள் பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளை செய்திட வேண்டும். மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் இதுபோன்ற உதவிகளை நீங்கள் செய்யும்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு விழிப்புணர்வுடன் செயல்படுவர்.

இந்த பயிற்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், அங்கன்வாடி பணிகள், ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை, மருத்துவப் பணிகள், சமுதாய ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு கல்வி தொடர்பு பணிகள், வளர் இளம் பெண்களின் மேம்பாட்டிற்கான அங்கன்வாடி செயல்பாடுகள், சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகள், அங்கன்வாடி மைய அளவிலான கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு குழு போன்ற பல்வேறு விதமான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சொல்லப்படும் திட்டங்கள் மற்றும் கருத்துக்களை அறிந்து அவைகளை சிறப்பாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இந்தப் பயிற்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்கலா, அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் டாக்டர் குமார், குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, போஷன் அபியான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி கிருத்திகா மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.