மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில்முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2022
.

செ.வெ.எண்:-49/2022

நாள்:26.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில்முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில்முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(26.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஜவுளி ஆலைகளின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். அனைவரிடமும் சிறிய ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக துணி நூல் துறை ஆணையர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை நிதியுதவி வழங்கவும், திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காவிற்குத் தேவையான நிலம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சின்னாளப்பட்டி பகுதியில் பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜவுளி ஆலைகள், வட மாநிலங்களில் இருந்து பருத்திகளை வாங்கி, நூல் உற்பத்தி செய்து, அதிகளவில் வடமாநிலங்களுக்கு அனுப்புவதால், அதிகமான செலவுகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் பருத்தி வேளாண்மையை அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் கலந்துபேசி தெரிவிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான நிலம் ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும். நிலத்தடி நீரினை எக்காரணம் கொண்டும், மாசு படுத்தக் கூடாது. ஜவுளி ஆலைகளில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து பயன்படுத்திட தேவையான சுத்திகரிப்பு நிலையங்களையும் ஜவுளிப்பூங்காக்களில் அமைக்கப்படும். ஜவுளிப்பூங்கா அமைக்கும்போது பல்வேறு நன்மைகள் ஏற்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவுளி ஆலைகளுக்குத் தேவையான தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, இங்கு சிறிய அளவிலா ஜவுளிப் பூங்கா அமைக்கும் நடவடிக்கைகளுக்கு தொழிலதிபர்கள் சிறந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உள்ளூர் திட்டக்குழுமத் துணை இயக்குநர் திரு.ரமேஷ்குமார், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரங்கராஜன், துணி நூல் துறை துணை இயக்குநர்(கரூர் மற்றும் திண்டுக்கல்) திரு.ஆனந்தகுமார், கைத்தறி ஆய்வாளர் திரு.ஜாபீர்அகமது மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஜவுளி ஆலை உரிமையாளர்கள், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.