மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 11/10/2021
.

...

செ.வெ.எண்:-23/2021

நாள்:11.10.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.10.2021) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 272 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும், பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேட்டரி பொருத்திய சக்கர நாற்காலிகளை 5 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு, தலா ரூ.5,072 மதிப்பில் தேய்ப்பு பெட்டிகள், திண்டுக்கல் வட்டம், அடியனூத்தைச் சேர்ந்த திரு.மணிகண்டன் என்பவர் மின்னல் தாக்கி இறந்ததையடுத்து, அவருடைய தாய் திருமதி பாலம்மாள் என்பவருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை, வேடசந்தூர் வட்டம், அய்யலூரைச் சேர்ந்த இன்பத்தமிழன் என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்ததையடுத்து, அவருடைய தாய் திருமதி அரியம்மாள் என்பவருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை, அய்யலூரைச் சேர்ந்த புனிதவள்ளி மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்ததையடுத்து, அவர்களுடைய தாய் திருமதி சின்னகுஞ்சம்மாள் என்பவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன்,இ.கா.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.