தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

செ.வெ.எண்:- 27/2021
நாள்:-17.03.2021
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, பழனி சட்டமன்ற தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 352, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 407, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 342, நத்தம் சட்டமன்ற தொகுதியில் 402, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 397 மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 368 என மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. மாவட்டம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்யவும்,மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதள நடைமேடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, தளவாட சாமான்கள், இணையதள வசதி ஆகிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வாக்குப்பதிவு நாள் 06.04.2021 அன்று வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்களை நியமிக்கவும், மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்வதற்கு தேவையான தன்னார்வலர்களை நியமிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு தேவையான முகக்கவசம், கையுரை, வெப்பநிலை பரிசோதனை கருவி, கிருமிநாசினி, முழு உடல் கவசம்(பிபி கிட்ஸ்) போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்ப பாதுகாப்பு உபகரணங்களை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(17.03.2021) பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பி.திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் திரு.சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் திரு.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.