மூடு

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2022

செ.வெ.எண்:-49/2022

நாள்:-31.01.2022

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு
3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்-2022 நடத்தப்படவுள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்-2022 நடத்தப்படவுள்ளது. தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு பணிகள் குறித்து 31.01.2022, 09.02.2022 மற்றும் 18.02.2022 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்ட பயிற்சி இன்று(31.01.2022) நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் 2709 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உட்பட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 09.02.2022 அன்றும், மூன்றாம் கட்ட பயிற்சி 18.02.2022 அன்றும் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.