மூடு

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2021
.

செ.வெ.எண்:-29/2021

நாள்:12.10.2021

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் – தொப்பம்பட்டி வேலு மஹாலில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள். துணைத்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தகுதியுள்ள பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கிராம பகுதிகளில், பொதுமக்களிடையே தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.ஆனந்தி, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) திருமதி வி.யசோதாமணி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா ஆகியோர் முன்னிலையில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்கள். ஊராட்சி செயலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தொப்பம்பட்டி ஊராட்சி வேலு மஹாலில் இன்று(12.10.2021) ஆலோசனை மேற்கொண்டு, தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், கொரோனா வைரஸ் பரவாமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில கிராமங்களில் தடுப்பூசி போடும் பணி குறைவாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற பகுதிகளில் கொரோனா தொற்று முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பிற துறைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடுபவர்கள் தங்களுக்குள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள மருத்துவ அலுவலர்களிடமோ, மருத்துவர்களிடமோ நேரில் சென்று, இதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவர்களை அணுகி, அதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதால் உடலுக்கு எந்தக்கேடும் ஏற்படாது. தடுப்பூசி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்கள் பட்டியலில் கடைசியாக இறந்த 19 நபர்களில் 17 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேலும், தீவிர சிகிச்சை வரை செல்ல வேண்டிய நிலையும் இருக்காது. வீட்டில் இருந்தபடியே குணமடைந்துவிடலாம். குறிப்பாக உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு அறிவுரையின்பேரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 70 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 28,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மாவட்ட நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராம மக்களுக்கு தடுப்பூசி போட தயாராக உள்ளது. பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பகுதிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து, வீடுவீடாகச் சென்று, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் என்னுடைய கோரிக்கையாக இதை ஏற்றுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோதுபட்டி கிராமத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து, கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்கள். அதையடுத்து, பொதுமக்கள் அனைவரும், தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அந்தோணியார், திருமதி சி.நளினா, தொப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஈஸ்வரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.