மூடு

நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம், மதிப்புக்கூட்டல் செயல்விளக்கம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2022
.

செ.வெ.எண்:-24/2022

நாள்:14.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம், மதிப்புக்கூட்டல் செயல்விளக்கம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தக்காளி, விலை சரிவால் விவசாயிகள் பாதிக்காத. வகையில், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, விற்பனை செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வரப்பெற்றுள்ளது.

தக்காளியை அரைத்து கூழாக்கும், நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(14.03.2022) பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டு, மதிப்புக்கூட்டல் செயல்விளக்கம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கள், பகுதிகளில், 5,500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ஒட்டு ரக விதைகள், குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் என்ற அடிப்படையில் அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஒரே சமயத்தில் வரத்து அதிகரிக்கும்போது, தக்காளி விலை சரிவை சந்தித்து, விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க, தக்காளி சாஸ். ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், பதப்படுத்தும் வசதி மேற்கொள்ளவும் ரூ.40 லட்சம் மதிப்பில், பழங்களை கூழாக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனம் செயல் விளக்கத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இந்த வாகனத்தில், இயந்திரங்கள் முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காஸ் எரிபொருளாக பயன்படுகிறது. இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள நீராவி இயந்திரம் வாயிலாக, பழங்களை கூழ் போல் வேக வைத்து, பின்னர் குளிர்விக்கப்படுகிறது. அதற்கு பிறகு, இயந்திரத்தால் அரைக்கப்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஏற்ப, உப பொருட்கள் பழக்கூழில் சேர்க்கப்பட்டு, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய முடியும்.

தக்காளி மட்டுமின்றி மாம்பழம், பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றலாம். தக்காளி அதிகம் விளையும் காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி, விற்பனை செய்யும்போது, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தக்காளியிலிருந்து, ஜாம் மற்றும் சாஸ் தயாரிக்கலாம. மேலும், கொய்யா, மாம்பழம், பப்பாளி ஆகிய பழங்களையும் பதப்படுத்தி, விலை வீழ்ச்சி ஏற்படும் காலத்தில். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யலாம். நடமாடும் வாகனம் என்பதால். விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து, உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் நடமாடும் வாகனமாக உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த முறையில் 1,000 கிலோ தக்காளியை பயன்படுத்தினால் 500 கிலோ தக்காளி பழக்கூழ் கிடைக்கும். இந்த இயந்திரம் மூலம் நாள் ஒன்றிற்கு ஒரு டன் தக்காளியை கூழாக்க முடியும். இதில் உற்பத்தி, கூழாக்குவது உள்பட எல்லா செலவுகளும் போக ஒரு நாளைக்கு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை லாபம் கிடைக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜெ.பெருமாள்சாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.