மூடு

நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
.

செ.வெ.எண்:-39/2025

நாள்:-12.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியை முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்திட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்துள்ளனர். அவர்கள் உயர்கல்வியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு வழிகாட்டும் வகையில் நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) தேர்வுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெகுதுாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வகையில் உண்டு, உறைவிட பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பழனி வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உண்டு, உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 50 மாணவர்கள், 166 மாணவிகள் என மொத்தம் 216 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

இலவச பயிற்சி புத்தகப்பொருட்கள், பல்வேறு வகையான வினா-விடைத்தாள் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன. இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தப்படவுள்ளன. நல்ல உணவு மற்றும் சிற்றுண்டி வசதிகள் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கும், கண்காணிப்பிற்கும் பொறுப்பு ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் அறையில் கட்டில் வசதியும், குளியலறை வசதியும் உள்ளது. உண்டு, உறைவிடப் பயிற்சி முகாம், சிறப்புத் தேர்வுகளுடன் நடைபெறும். இந்த மையத்தில் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகள், சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் கடின உழைப்பு, கவனம், முழுமையான ஈடுபாடு, தன்னொழுக்கம், மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வில் வெற்றி பெறலாம். நல்ல மனநிலை மற்றும் உடல் நலத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தேர்விற்கு மிகக்குறைவான நாட்களே உள்ளதால், மாணவ, மாணவிகள் மனதை கட்டுப்படுத்தி, கவனத்தை சிதற விடாமல் படிக்க வேண்டும். இந்த ஒருமாதம் கஷ்டப்பட்டு படித்தால் அதன் பலன் கிடைக்கும்போது, வாழ்க்கையில் வெற்றி கிடைத்திடும்.

மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்திக்கொண்டு, படித்து, எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பை அடைய இந்த பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பெறும் வெற்றி உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தவர்களுக்கும், அடுத்து வரும் மாணவ, மாணவிகளுக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமைவதுடன், ஊக்கத்தை ஏற்படுத்திடும்.

இதுதவிர, உண்டு-உறைவிடம் அல்லாத பயிற்சியில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் 52 மாணவ, மாணவிகள், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவிகள், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 34 மாணவ, மாணவிகள் மற்றும் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவ, மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆகமொத்தம் மாவட்டம் முழுவதும் 78 மாணவர்கள், 272 மாணவிகள் என மொத்தம் 350 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் நல்ல முறையினல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், குளோபல் சொல்யூசன்ஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவி, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.