மூடு

நீலமலைக்கோட்டை கிராமத்தில் தனியார் ஆக்கிரமீப்பிலிருந்து மீட்கப்பட்ட கிணறுகளிலிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை- மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/05/2019
1

3 2

செ.வெ.எண்:-5/2019 நாள்:- 07.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

நீலமலைக்கோட்டை கிராமத்தில் தனியார் ஆக்கிரமீப்பிலிருந்து மீட்கப்பட்ட கிணறுகளிலிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை
– மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், நீலமலைக்கோட்டை கிராமம், ஜோத்தால்நாயக்கன்குளம் சீரமைக்கும் பணி, மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் கிணறுகளிலிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை இன்று (07.05.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு தெரிவித்ததாவது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் செம்மைப்படுத்தி, அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நீர்நிலைகளை கிராமக் கணக்குகளில் உள்ள அளவீடுகளின்படி நிலஅளவை செய்தல், எல்லைக் கற்கள் நடுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுதல், தூர்வாருதல் என படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மேற்கு வட்டம், நீலமலைக்கோட்டை கிராமத்தில் ஜோத்தால்நாயக்கன்குளம் என்ற குளம் பழனி, நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்; அமைந்துள்ளது. இதன் மொத்த விஸ்தீரணம் 7.87.50 ஹெக்டேர் ஆகும். 14 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 310 மீட்டர் நீளமுள்ள கரை (Bund) கொண்டுள்ள இந்த குளத்தில் 15 Mcft தண்ணீர்; சேமித்து வைக்க இயலும். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒருபகுதியான கன்னிவாடி மலைகளில் உருவாகும் சிற்றாறுகள் ஏழுக்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் வழியாக ஜோத்தால்நாயக்கன் குளத்தை அடைகிறது. இக்குளம் 180 ஏக்கர் ஆயக்கட்டு கொண்டுள்ளது. மேலும், நீலமலைக்கோட்டை, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 20000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை இக்குளம் நிறைவு செய்கிறது.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நீலமலைக்கோட்டையில் அமைந்துள்ள இந்த நீர்நிலையிலும் மற்றும் வரத்துவாய்க்கால் பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு முறையீடுகள் வரப்பெற்றன. இதனையடுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இந்த நீர்நிலை மற்றும் வரத்து வாய்க்காலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

சிறப்பு நில அளவைப் பணியாளர்களை நியமனம் செய்து 18.183 கிலோ மீட்டர் நீளமான வாய்க்கால்கள், நீர்பிடிப்பு பகுதி ஆகியவற்றை முழுமையாக அளவீடு செய்து ஊரக வளர்ச்சித்துறை மூலம் எல்லைக் கற்கள் (Boundary Stones) நடப்பட்டது. நில அளவையின் போது, நீர் வரத்து பகுதியை ஒட்டியுள்ள பட்டாதாரர்கள் சிலர், ஓடைக்கரையை அழித்து, ஓடையின் ஒரு பகுதியில் தென்னை மற்றும் பிற பயிர்கள் சாகுபடி செய்தும், மின் வேலி அமைத்தும், ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக, ஓடையின் பரப்பளவு மிகவும் குறைந்திருந்ததும், அதன் காரணமாக ஓடையில் தண்ணீர் வரத்து தடை பட்டதும் அறியப்பட்டது. மேலும், ஓடையின் மையப்பகுதியில் பெருமளவு காய்க்கும் தென்னை மரங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், ஓடைப் பகுதிகளில், நீர் வரத்திற்கு தடையாக இருந்த 2000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், கட்டிடங்கள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகளை, கனரக இயந்திரங்கள் மூலமாக முழுமையாக அகற்ற நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஆக்கிரமிப்பாளர்களால், ஓடைப்பகுதிகளில் ஏற்படுத்தி இருந்த 13 திறந்த வெளி கிணறுகளை, பொது மக்கள் குடி தண்ணீர் பயன்பாட்டிற்காக ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 13 கிணறுகளில் 8 கிணற்றில் கோடை காலத்திலும் நீர் ஊற்று நல்ல நிலையில் உள்ளதால் நீலமலைக்கோட்டையை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீருற்றுள்ள கிணறுகளை ஒன்றினைக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் மூலமாகவும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

ஜோத்தால் நாயக்கர் குளம் வரத்து வாய்க்கால் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் முழுமையாக தூர் வாரி பல் வேறு வாய்க்கால்கள் மூலம் வரும் தண்ணீர் தங்கு தடையின்றி வரவும், நீர் பிடிப்பு கொள்ளளவினை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஓடைப்பகுதியின் மையப்பகுதிகளில் இருந்த தென்னை மரங்களை முழுமையாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நீர் வழிப்பகுதி கரைகளை பலப்படுத்திட, நான்கு சக்கர வாகன வழித் தடம் துநநி வசயஉவ ஏற்படுத்தப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு, பசுமைப் பரப்பளவை அதிகரிக்கவும், திண்டி மா வனம் என்ற அரசு சார அமைப்பு மற்றும் விவசாயிகள் உதவியுடன் 10,000 பனை விதைகளை சேகரம் செய்து, அரசு, தொண்டு நிறுவனம் மற்றும் மாணவ மாணவியரின் துணையுடன், வாய்க்கால் மற்றும் குளங்களின் கரைகளிலும், நீர்நிலைகளின் அருகே உள்ள காலியிடங்களிலும் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவை வரத்து வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துவதோடு, நீர்நிலைகளின் எல்லைகளை தெளிவாக இயற்கை அரண்களாக வரையறுக்க உதவும். ஊரக வளர்ச்சித்துறையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.15.16 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், நாற்றுப் பண்ணை (Nursery) அமைத்து, நீலமலைக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், அதிக அளவில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மரக்கன்றுகள் வளர்த்து, அவற்றை நீர்நிலைகளில் நடுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்; பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலமாகவும், மரக் கன்றுகள் பெற்று, கரைப்பகுதிகளிலும், கரையோர காலியிடங்களிலும், அவற்றை நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்பையா, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.உமாசுந்தரி, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.விஜயாசந்திரிகா, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்