படைவீரர் கொடிநாள்

செ.வெ.எண்:20/2021
நாள்:08.12.2021
படைவீரர் கொடிநாள் – 2021ஐ முன்னிட்டு, ரூ.2.26 இலட்சம் மதிப்பீட்டில் முன்னாள் படைவீரர்களின் சிரார்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவி வழங்கி, முன்னாள் படைவீரர்களை பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கௌரவித்தார்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், படைவீரர் கொடிநாள்-2021ஐ முன்னிட்டு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்து, முன்னாள் படைவீரர் மகளின் திருமண நிதியுதவியாக 3 நபர்களுக்கு தலா ரூ.25,000, கல்வி உதவித்தொகையாக 10 நபர்களுக்கு ரூ.1,51,500 என மொத்தம் ரூ.2,26,500 மதிப்பில் உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி தெரிவித்ததாவது:
நமது தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் அரிய சேவையினை பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-7ம் நாள் கொடிநாள் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அவ்வாண்டிற்கான கொடிநாள் வசூல் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த கொடிநாள் நன்கொடை வசூல் தொகை, போரில் உயிர்நீத்த படைவீரரின் குடும்பத்திற்கும்இ போரில் ஊனமுற்ற படைவீரருக்கும் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கொடிநாள் தொகையாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,19,48,357 வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதி மூலமாக 369 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,18,50,507 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்இ தொகுப்பு நிதி மூலம் 155 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.41,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நாட்டிற்காக தமது இன்னுயிர் நீத்தும்இ உடல் ஊனமுற்றும், இளமை காலத்தை தேச நலனுக்காக அர்ப்பணித்தும்இ எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் பாதுகாத்தும், அளப்பறிய தியாகம் செய்யும் படை வீரர்களை கௌரவிக்கும் வகையிலும்இ வீரர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும். நம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் மீது காட்டும் அன்பின் இலக்கணமாகவும், இது ஒரு பொன்னான வாய்ப்பாகவும் கருதி, பொதுமக்கள் கொடிநாள் நன்கொடைகளை வழங்கிட முன்வர வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர் சார்ந்தோர்களது குறைகளை களைய எந்த நேரத்திலும் தயாராக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துள்ள அனைவருக்கும் எனது படைவீரர் கொடிநாள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) திருமதி சுகுணா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.