மூடு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2021
.

செ.வெ.எண்:-07/2021

நாள்:-05.07.2021

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் ஆகியோர் இன்று(05.07.2021) ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடிநீர் திட்டப்பணிக்கு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ரூ.22.72 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டதிற்கு பாலாறு அணையின் கீழ் கால்வாய் பகுதியில் நீர் எடுக்கும் கிணறு 3.50 மீட்டர் விட்டம், 6 மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்பட்டு, தினசரி 2.31 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும், முடியும் தருவாயில் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து பணிகளை வரும் 31.08.2021-க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

திருக்கோயில் மேம்பாட்டு பணிக்கு 52 ஏக்கர் நிலம் எடுப்பு பணி தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து. மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் பழனி மலைக்கோயிலுக்கு படி வழியாக சென்று, படி வழிப்பாதையில் உள்ள கோயில் மருத்துவமனை, குடிநீர் உட்பட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் மாண்புமிகு அமைச்சர்கள் மலைக்கோயிலில் தினசரி நடைபெறும் ஆறுகால பூஜை நிகழ்ச்சிகள் குறித்து கேட்டறிந்தனர். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில் தினசரி காலை 06.40 மணிக்கு விளாபூஜை மற்றும் சன்யாசி அலங்காரம், காலை 08.00 மணிக்கு சாறுகாலசந்தி பூஜை மற்றும் வேடர் அலங்காரம், காலை 09.00 மணிக்கு காலசந்தி பூஜை மற்றும் பாலசுப்பிரமணியர் அலங்காரம் அலங்காரம், நண்பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் வைத்தீக அலங்காரம், மாலை 05.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் இராஜஅலங்காரம், இரவு 08.00 மணிக்கு இராக்கால பூஜை மற்றும் வெள்ளை சாத்துப்படி என ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆறுகால பூஜைகளின் போது, ஓதுவார்கள் மற்றும் அர்ச்சகர்கள் பாடும் திருபதிகங்கள், போற்றிகள் மற்றும் தமிழ் அர்ச்சனை ஆகியவற்றினை தற்போது மலைக்கோயில் கிரிவீதியில் வலம் வரும் பக்தர்கள் மட்டுமே கேட்டு இறையருள் பெறப்பட்ட நிலையில், உலகளவில் உள்ள பக்தர்கள் நேரலையாக கேட்டு இறையருள் பெறும் வகையில் திருக்கோயில் வலைதளம்(Website) https://palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலை ஒலி(YouTube) https://www.youtube.com/channel/UC6kg5EbBPixNm3r2-LZkAxw ஆகியவை மூலம் அர்ச்சனைகள், திருபதிகங்கள் மற்றும் போற்றிகள் நேரடி ஒளிபரப்பை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் பள்ளி, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி, சித்தா கல்லூரி அமைவிடம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில் மற்றும் யானை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, திருக்கோயில் அலுவலர்கள், திருக்கோயில் பொறியாளர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, மாணவர் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான தேவைகள் மற்றும் பணியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆய்வுக்குப்பின், மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி கோயிலில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல இரண்டாவது ரோப்கார் திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறாமல் கடந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுவிட்டனர்.இரண்டாவது ரோப்கார் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனி திருக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் இதுவரை குடமுழுக்கு நடத்தப்படவில்லை. குடமுழுக்குப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, இன்னும் ஒரு ஆண்டுக்குள் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், திருப்பதிக்கு இணையாக பழனி கோயில் மேம்படுத்தப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான அளவு நிரந்தர பணியாளர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் கலைக்கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனி நகர் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை முழுமையா பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோவிந்தராசு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் திரு.நடராஜன், உதவி ஆணையாளர் திரு.இரா.செந்தில்குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.