மூடு

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்க புதிய திட்டம் “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 20/10/2021

செ.வெ.எண்:-35/2021

நாள்:-20.10.2021

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்க புதிய திட்டம் “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை 18.10.2021 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடியிருந்ததால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்த ஒரு குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:-

  • கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்கக் காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.
  • பள்ளி நேரத்தை தவிர மாணவர்களின் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.
  • மாணவர்கள் பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை இல்லம் தேடி கல்வித் திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.
  • இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதன் மூலமே மாணவர்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்கு செல்லும் பொழுது அவர்கள் அதற்கு முழுத் தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.
  • இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயலாக்கமானது இக்கல்வியாண்டில் 6 மாதகாலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 1/2 மணிநேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இல்லம் தேடி கல்வித் திட்டமானது தெரிவு செய்யப்பட்ட கீழ்காணும் 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகக் கிடைக்கப் பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மற்றும் விழுப்புரம்.
  • இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 நிலைகளில் செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டமானது ஒரு அரசு திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக்குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. இதில் கிராம அளவில் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் செயல்பாடுகள் நடத்தப்படும்

சைக்கிள் பேரணி, வீதி நாடகம், பொம்மலாட்டம், கதைசொல்லுதல், திறன்மேம்பாட்டு செயல்பாடுகள்.

தன்னார்வலர்கள் அவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதைப்போலவே 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலைப் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென சேவையாற்ற விருப்பமுடைய 38 மாவட்டங்களிலுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே கணினி மற்றும் Smart Phone மூலமாகவும் மற்றும் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labs மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்/ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான இலட்சினை (Logo with Tag Line) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

இதற்கான இலட்சினை (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி நடத்தப்பட வுள்ளது. இதில் அனைத்து நகர்/ஊரக பகுதியில் உள்ள பள்ளி/கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு எதுவும் இல்லை

போட்டியாளர்கள் தங்களின் இறுதி படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் இலட்சினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கிய ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

செய்தியாளர் சந்திப்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கருப்புசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.பாண்டித்துரை, உதவி திட்ட அலுவலர் (கல்வி) திரு.பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.