மூடு

மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றலை உறுதி செய்வதற்காக கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2024
.

செ.வெ.எண்:-12/2024

நாள்:-06.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றலை உறுதி செய்வதற்காக கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப்படி” முகாம்கள் மூலம் மாணாக்கர்களின் உயர்கல்வி கற்றலை உறுதி செய்வதற்காக கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(06.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற உயர் கல்வியில் சேராதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்காக “உயர்வுக்குப்படி” என்ற நிகழ்ச்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் கோட்டத்தில் 09.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய நாட்களிலும், கொடைக்கானல் கோட்டத்தில் 12.09.2024 மற்றும் 21.09.2.024 ஆகிய நாட்களிலும், பழனி கோட்டத்தில் 26.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய நாட்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 09.09.2024 அன்று திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியிலும், 12.09.2024 அன்று கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் “உயர்வுக்குப்படி” என்ற உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, உயர்கல்வி சேர்க்கை நடைபெற உள்ளது.

மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு கல்லூரி நிர்வாகத்தினர்கள், மாவட்டத் திறன் மேம்பாட்டுக்கழகம், சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்க உள்ளனர்.

எனவே, கடந்த 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்று, தற்போது வரை உயர்கல்வி பயிலாத மாணவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திரு.சக்திவேல், பழனி திரு.சௌ.சரவணன், கொடைக்கானல் திரு.சிவராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, முதன்மைக்கல்வி அலுவலர் திரு.இரா.புண்ணியகோடி, துணை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.