மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேர்வர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி, இளைஞர்கள் அரசுப் பணியில் சேர்ந்து, பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை ஆற்றிட வேண்டும், என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2024
.

செ.வெ.எண்:-11/2024

நாள்:06.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேர்வர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி, இளைஞர்கள் அரசுப் பணியில் சேர்ந்து, பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை ஆற்றிட வேண்டும், என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(தொகுதி-2 மற்றும் 2ஏ) தேர்வினை எழுத உள்ள தேர்வர்களை இன்று(06.09.2024) சந்தித்து, தேர்வுக்கூட அனுமதி சீட்டினை வழங்கி, தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக 27.02.2024 அன்று துவக்கி வைத்தார்கள்.

இந்த பயிற்சி மையம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதிகள் உள்ளதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல முடியும்.

இந்த பயிற்சி மையத்தில் தற்போது சுமார் 200 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பயிற்சி தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், இரயில்வே துறை, வங்கித் துறை உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. போட்டித்தேர்வு நடப்பதுபோலவே முறையாக நேரம் நிர்ணயிக்கப்பட்டு மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்கவும், பதட்டமின்றி தேர்வு எழுதவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(தொகுதி-2 மற்றும் 2ஏ) தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித்தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் 22,693 தேர்வர்கள் எழுதவுள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 170 மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(தொகுதி-2 மற்றும் 2ஏ) தேர்வு எழுதவுள்ளனர். தையரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னபிக்கை, விடா முயற்சி, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். அதேபோல், இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் நன்றாக பயிற்சி பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அரசுப் பணிகளுக்கு சென்று மக்கள் சேவை ஆற்றிட வேண்டும். அப்போதுதான், கிராமப்புற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி மையத்தை நாடி பயன்பெற ஊக்கம் ஏற்படும்.

இந்த பயிற்சி மையத்திற்கு ஆய்வுக்கு வந்தபோது, படிப்பதற்கு கூடுதல் புத்தகங்கள், கையேடுகள், பயிற்சி அளிக்க கூடுதல் ஆசிரியர்கள் தேவை என மாணவ, மாணவிகள் கோரிக்கைவிடுத்தனர். அவர்கள் தேவையை நிறைவேற்றும் வகையில், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள், பயிற்சி கையேடுகள் மற்றும் கணினி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்க கூடுதல் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும், மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக இங்கு விடுதி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஊரகப் பகுதியில் வசிக்கும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் இணைந்து உயர் பதவிகள் பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த பயிற்சி மையம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் துணை ஆட்சியர் திரு.சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.