மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025
.

செ.வெ.எண்:-97/2025

நாள்: 29.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று(29.07.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப்போல் மகளிர் உரிமைத் தொகை முதல் தவணையாக சுமார் 1.16 கோடி நபர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், விடுபட்ட நபர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை தளர்த்தி கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில், மாங்கரை ஆற்றிலிருந்து பெருமாள் கோயில் குளம், புதுக்குளம், மந்தைகுளம், அப்பணம்பட்டி குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்கால்களை நிரந்தரமாக சீரமைக்க ஏதுவாக சிமெண்ட் வாய்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு, அக்கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு தான் இந்த மக்கள் அரசு, மக்களுடைய முதல்வர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு நாளும் மகளிர் உரிமைத்தொகைக்கு மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையை கேட்டுக்கொண்டிருக்கிறார். இம்முகாமில் மனுக்கள் அளித்தால் தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்,

இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வு காணப்பட்ட வகையில் ஒரு பயனாளிக்கு இறப்பு சான்றிதழ், ஒரு பயனாளிக்கு பட்டா பெயர் மாற்றம் சான்றிதழ் ஆகியவற்றை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.இராஜா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், அகரம் பேரூராட்சித் தலைவர் திரு.எஸ்.நந்தகோபால், செயல் அலுவலர் திரு.ஏ.சூசைஇன்பராஜேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.