மூடு

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தாடிக்கொம்பு பேரூராட்சியில் குளம் மற்றும் கால்வாய் தூர்வாருதல் உட்பட ரூ.75 இலட்சம் மதிப்பீட்டிலான 5 பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2022
.

செ.வெ.எண்:-31/2022

நாள்:17.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தாடிக்கொம்பு பேரூராட்சியில் குளம் மற்றும் கால்வாய் தூர்வாருதல் உட்பட ரூ.75 இலட்சம் மதிப்பீட்டிலான 5 பணிகளை துவக்கி வைத்தார்.

இந்தப் பணிகளில் 24,750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் -மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் குளம் மற்றும் கால்வாய் தூர்வாருதல் உட்பட 5 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்(2021-2022) கீழ், தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட காப்பிளியபட்டி முதல் கொண்டசமுத்திரம் குளம்(வழி மறவபட்டி) வரை உள்ள கால்வாய் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணிகள், பிரம்மசமுத்திர குளம் முதல் மூக்கையாபிள்ளை குளம் வரை உள்ள கால்வாய் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், சின்னக்கால் குளம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், நைனா ஆசாரி குளம் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், தாடிக்கொம்ப பூஞ்சோலை முதல் அய்யம்பாளையம் வரை சாலை ஓரங்களில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் என மொத்தம் 5 பணிகள் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப்பணிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மறவப்பட்டியில் இன்று(17.03.2022) துவக்கி வைத்து, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் தனிநபர் வேலைக்கான அடையாள அட்டைகளை பணியாளர்களுக்கு வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதோடு, சொல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிந்தனையில் உதிக்கப்பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 2021-2022-ஆம் ஆண்டிற்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம், பெருநகரங்கள், நகராட்சிகள் மற்றும் பெரூராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி, தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் 3,335 நபர்களுக்கு தனிநபர் வேலைக்கான அடையாள அட்டைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளில் மொத்தம் 24,750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கையினால், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மொத்த நகைக்கடன்களின் எண்ணிக்கை 13,47,033 ஆகும். இதன்மூலம் 10,18,066 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மின் உற்பத்தி போதுமான அளவு உள்ளது. தமிழக அரசு மின் உற்பத்தியில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்காரணமாக எதிர்காலத்தில் தமிழகத்தில் மின்தடை என்பது இருக்காது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் ஆதாரங்கள் செம்மைப்படுத்தப்படும்.

தமிழக அரசின் திட்டங்களை அனைத்தும், கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்களது கடமை. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தாடிக்கொம்பு பேருந்து நிறுத்தத்தில்(மேற்கு பகுதி) ரூ.5.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் அகரம் பேரூராட்சிக்குட்பட்ட உண்டார்பட்டியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடை புதிய கட்டடம் ஆகியவற்றை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சௌ.சரவணன், உதவி செயற்பொறியாளர்(பேரூராட்சிகள்) திரு.ஆ.இசக்கி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் திருமதி சி.கவிதா சின்னதம்பி, துணைத்தலைவர் திரு.சு.நாகப்பன், செயல் அலுவலர் திரு.சு.சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.