மூடு

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மருதா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து, பகுதிநேர நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2021
.

செ.வெ.எண்:-18/2021

நாள்:-12.09.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மருதா நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து, பகுதிநேர நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று(12.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், அய்யம்பாளையத்தில் மருதா நதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தும், மருதாநதி அணை பகுதியில் உள்ள பகுதிநேர நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தினை திறந்து வைத்தும் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதோடு, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சட்டமன்றத்தில் 110 விதியில் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அறிவித்துள்ளார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வேளாண்மைத்துறையை உழவர் நலத்துறையாக மாற்றிய பெருமை நமது முதலமைச்சரையே சாரும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி அணையிலிருந்து 120 நாட்களுக்கு 12.09.2021-ஆம் தேதியிலிருந்து முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றிற்கு 70 கன அடி தண்ணீரும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றிற்கு 20 கன அடி என மொத்தம் நாள் ஒன்றிற்கு 90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றிற்கு 20 கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் 6,583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மருதாநதி அணையின் மொத்தம் நீளம் 2650 மீட்டர் ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 188.5 மி.க.அடி, அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். அணையின் தற்போதைய நீர் இருப்பு உயரம் 72 அடி, கொள்ளளவு 175 மி.க.அடி, நீர் வரத்து 30 கன அடி/வினாடி, நீர் வெளியேற்றம் 90 கன அடி/வினாடி. மேலும், மருதாநதி அணை அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

மருதாநதி அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

மருதாநதி அணை மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அவர்கள் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்திலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அணை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் விவசாய பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருவதால் தட்பவெப்ப நிலை விவசாயத்திற்கு சாதகமாக மாறி வருகிறது. இதனால் தமிழகத்தில் விவசாயம் நடைபெறாத பகுதிகளில் கூட விவசாயப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, விவசாயகளுக்குரிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் 40 சதவீதம் உயர்ந்து, தமிழகம் பசுமை மாநிலமாக மாறி வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் கடந்த 3 மாதங்களாக தரமான அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் அரசாக செயல்பட்டு வருகிறது என மாண்புமிகு கூடடுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், மருதாநதி அணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.ஜி.காந்திநாதன், துணைப்பதிவாளர் திரு.திருமாவளவன், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.மு.பாஸ்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் திரு.சௌந்தரம், உதவிப் பொறியாளர் திரு.மோகன்தாஸ், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.ஸ்ரீதர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.