மூடு

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளை பரிசாக வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 11/10/2021
.

...

செ.வெ.எண்:-21/2021

நாள்:-10.10.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளை பரிசாக வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, தகுதியுள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் தமிழகத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5வது முறையாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,059 இடங்களில் இன்று(10.10.2021) நடைபெற்றது.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பெ.செந்தில்குமார்(பழனி),திரு.ச.காந்திராஜன்( வேடசந்தூர்) ஆகியோர் முன்னிலையில் சின்னாளப்பட்டி சிக்கனம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட திருமதி ஜெயலட்சுமி என்ற பயனாளிக்கு, வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை பரிசாக வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகா நிறுவன பங்களிப்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் மற்றும் ரூ.1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை துவக்கி வைத்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

சின்னாளப்பட்டிக்குட்பட்ட சிக்கனம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மக்கள் நல அரசாக, மக்களை காப்பாற்றுகின்ற அரசாக, செயல்பட்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நிரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிப்பதோடு, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு பணியில் உலக அளவில் தமிழகத்தில் சிறப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், நமது மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பெருந்தொற்றினால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனா தடுப்பூசியும் தமிழகத்தில்தான் அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது.

தொப்பம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், இரண்டாவது பரிசாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, மூன்றாவது பரிசாக சலவை இயந்திரம் மற்றும் ஆறுதல் பரிசாக 20 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்கம் நாணயமும் வழங்கப்படும்.

இதுபோன்ற பரிசுகள் வழங்கப்படுவது, விலையற்ற பல நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத, உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக என்பதை, பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது சுகாதாரத்துறை எடுக்கும் அனைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க

வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களை காப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறார்கள். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தடையின்றி வழங்கி வருகிறார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின்படி, தமிழகம் முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 5வது வாரமாக இன்று தமிழகம் முழுவதும் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்றைய முகாம்களில் இன்று பகல் ஒரு மணி வரை 9.64 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிகத்தில் 25 லட்சம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்தி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள், ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் அளவிற்கு முதல் தவணை, தடுப்பூசி செலுத்தியிருந்தால், கொரோனா பரவல் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் கூட, அதிகளவில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 64 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5.03 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக 12.09.2021 அன்று நடைபெற்ற 1,225 முகாம்களில் 72,459 நபர்களுக்கும், இரண்டாவது முறையாக 19.09.2021 அன்று நடைபெற்ற 359 முகாம்களில் 30,124 நபர்களுக்கும், மூன்றாவது முறையாக 26.09.2021 அன்று நடைபெற்ற 1,010 முகாம்களில் 81,287 நபர்களுக்கும், நான்காவது முறையாக 03.10.2021 அன்று நடைபெற்ற 898 முகாம்களில் 50,649 நபர்களுக்கும் என மொத்தம் 3,492 முகாம்களில் 2,34,519 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 65.7 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் பழனி நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 30 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 100 சதவீதம் இலக்கை அடைந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியில் திண்டுக்கல் மாவட்டம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் 5வது தடுப்பூசி போடும் முகாமில், 80,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 86,660 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிதான் தீர்வு. கொரோனா பாதிப்பில் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதன்பேரில் தமிழகத்தில் 71 இடங்களில் தனியார் சமுதாய பங்களிப்புடன்(CSR) ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்களை மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார்கள். தமிழகத்தில் 222 ஆக்சிஜன் உற்பத்தி அமைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் பல ஆயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தேவை இருந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியின் காரணமாக, தற்போது அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டு, கொரோனா பரவல் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் கூட, ஆக்சிஜன் தேவையை சமாளிக்கும் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி அமைப்புகள் நமது மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களுக்காக சமுதாயப்பங்களிப்புடனும், மாண்புமிகு கூட்டுறவுதுறை அமைச்சர் அவர்களின் ஆதரவுடனும், நாகா புட் பிராடக்ஸ் நிறுவனம் வழங்கிய OXAIR ஆக்சிஜன் உற்பத்தி கலன் ரூ.80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் உற்பத்தி கலன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி கலன்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் நிதியின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி (ஒரு நாளைக்கு 2 மெட்ரிக் டன்) செய்யும் திறன் கொண்டது. மின்சாரத்திற்கு (மாற்றாக) DG Genset (250 KV) திறன் கொண்டது தயாராக உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சேவை துறைகளுடன் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். கொசு மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு, தடுப்பூசி செலுத்தியவர்களிலர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி கவிதா என்ற பயனாளிக்கு வண்ணத்தொலைக்காட்சி பெட்டி மற்றும் 4 பயனாளிகளுக்கு ஹாட்பாக்ஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள் முன்னிலையில் வேடசந்தூர் பேரூராட்சி பகுதியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்து, அவர்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., இயக்குநர் (பொது சுகாதாரத்துறை) மரு.டி.எஸ்.செல்வவிநாயகம், இணை இயக்குநர்(பொது சுகாதாரம்) மரு.நிர்மல்சன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.எஸ்.அன்புச்செல்வன், மாவட்ட திட்ட அலுவலர் (CMCHIS) திரு.இரா.விஜய் ஆனந்த், துணை இயக்குநர்கள் மரு.மு.வரதராஜன், மரு.வி.யசோதாமணி, உதவி இயக்குநர்(பேரூராட்சி) திரு.மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சித் தலைவம் திரு.மு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி எம்.மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் திருமதி எம்.ஹேமலதா மணிகண்டன், கோட்டாட்சியர்கள் திருமதி காசிசெல்வி(திண்டுக்கல்), திருமதி ஆனந்தி(பழனி), சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி பிரகந்தாநாயகி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.