மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
செ.வெ.எண்:-67/2024
நாள்:-27.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு தலைவர்(பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்) திரு.தி.வேல்முருகன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று(27.09.2024) ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு(2024-2025) உறுப்பினர்கள் சோழிங்கநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச.அரவிந்த் ரமேஷ், சேலம்(மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.அருள், வானுார் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.சக்கரபாணி, திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.நல்லதம்பி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சா.மாங்குடி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே.மோகன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஜெயக்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், கோரிக்கை மனுக்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருகோயில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், கோரிக்கை மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் சமையலறை, அன்னதானம் தயாரிப்பு பணிகள், அன்னதானம் நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானம் தரம் குறித்து பக்தர்களிடம் கேட்டறியப்பட்டது.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரத்தில் இந்தியா-இஸ்ரேல் கூட்டு தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையத்தில் காய்கறிகள், நாற்றுகள் உற்பத்தி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், பழனி வருவாய் கோட்டம் சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள்) மரு.பூமிநாதன், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திரு.எஸ்.என்.திலீப் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.