மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (23.05.2022) தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 23/05/2022
.

செ.வெ.எண்:-39/2022

நாள்:23.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(23.05.2022) தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து கள்ளிமந்தையம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(23.05.2022) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 62 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை துறையின் மூலம் இத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரம், கள்ளிமந்தையம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், உளுந்து விதை, கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கி பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உருவாக்கி சட்டமன்றத்தில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளித்துள்ளார். குறுவை சாகுபடி பணிக்காக முன்னாக தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதற்கிணங்க மேட்டூர் அணையிலிருந்து மே24-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் உழவர் சந்தைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது அந்த உழவர் சந்தைகளை புத்துயிரூட்டி, கூடுதலாக உழவர் சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னதற்கிணங்க, தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் அளவிற்கு கொண்டுவருவதற்காக மரக்கன்றுகள் நடவு செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிட்டங்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லூரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லூரிகள், பழனியில் ஒரு சித்தா மருத்துவக் கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் என 6 கல்லூரிகள் தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்;. அதன்படி. ஆத்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளிகளிலே படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் காலத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வேளாண்மைக் கல்லூரி, கால்நடை கல்லூரி, மீன்வளக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மண் சாலைகளை தார்ச்சாலைகளாக மேம்படுத்த ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மரிசிலம்பு என்ற இடத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், விதைகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், வீட்டுத்தோட்ட காய்கறி தழை, பழச்செடிகள் கொண்ட தொகுப்பு, முதியோர் உதவித்தொகை, உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் திரு.தங்கம், வேளாண்மை துணை இயக்குநர்(மாநில திட்டம்) திரு.பெ.சுருளியப்பன், திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜெ.பெருமாள்சாமி, பழனி உதவி செயற்பொறியாளர் திரு.தி.ராஜா, தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் திரு.ஆ.காளிமுத்து, தோட்டக்கலை உதவி இயக்குநர் திரு.ஆ.கிருஷ்ணமூர்த்தி, துணை வேளாண்மை அலுவலர் திரு.ஆர்.தங்கவேல் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.