மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 10/11/2021
.

.

செ.வெ.எண்:-20/2021

நாள்:-10.11.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், இன்று(10.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நாம் வாழ்கின்ற பூமித்தாய்க்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனித குலம் ஒன்றி வாழ வீணாகும் மழை நீரினை 100% நமக்கு தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற விழிப்புணர்விற்காகவும் தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, உழவின்மை என பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, கட்டிட மேற்கூரைகளில் விழும் மழை நீரினை தேக்கிவைத்து உபயோகிக்க, திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA District Rural Development Agency)யின் கீழ், மாவட்ட முழுவதும் 600 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகளை (Roof – Top Rain Water Harvesting Structures) அமைக்கவுள்ளோம். இந்த மாபெரும் முயற்சியானது உலகிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. ஆகவே, இந்த நிகழ்வினை” 21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்குதல்” என்னும் மாபெரும் உலக சாதனையாக மாற்றவுள்ளோம்.

இந்த மகத்தான உலக சாதனை முயற்சியை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு இ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு இரா.சக்கரபாணி அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று (10-11-2021) திண்டுக்கல் மாவட்ட ஆட்சிதலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் கண்காணிப்பில் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் 14 (Block) ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 445 கிராமங்களின் அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021 ஆம் தேதிக்குள் 600 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்படவுள்ளது.

உலக சாதனை விதிகளின்படி குறைந்தது 9000 லிட்டர் மழைநீர் தேக்கும் விதமாக ஒவ்வொரு தொட்டியும் கட்டமைக்க வேண்டும். தேக்கியபின் அதிகளவில் வெளியேறும் மழைநீரை நிலத்தில் உள்ள கிணறு, போர்வெல், மழைநீர் வடிகால் தொட்டிகளில் சேரும்விதமாக கட்டமைக்க வேண்டும் என பல்வேறு விதிகளை பின்பற்றி நடைமுறைப் படுத்தவுள்ளோம். குறைந்தது 2 கோடி லிட்டர் மழைநீர் தேக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். மழைக் காலத்தில் வீணாக ஆவியாகும் மழை நீரினை இவ்வாறு தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் மாறிவிடும்.

இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய முயற்சியை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ( USA – LLC ), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ” 21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்குதல் ” (Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations in 21 days) சாதனை முயற்சி திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்; நிகழ்வாகும். உலக வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்த்தப்படும் மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.இரா.இரா.விஸ்வநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியங்கா, இ.ஆ.ப., உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.