மூடு

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2019
1

செ.வெ.எண்:-35/2019 நாள்:- 16.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (16.09.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, வடக்கிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடும். கடந்த கஜா புயல் மற்றும் வடக்கிழக்கு பருவமழை காலங்களில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 67 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. (Vulnerable areas) இப்பகுதிகள் அனைத்திற்கும் முதல்நிலை பொறுப்பாளர்கள் (First Responders) நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மழை, வெள்ளம் குறித்தான முதல் தகவலினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் : 0451-1077-ற்கு தெரிவித்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

கடந்த காலங்களில் வெள்ளப் பெருக்கின்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட 67 இடங்களில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், மேலும் வெள்ள பெருக்கு ஏதும் ஏற்படின், அச்சமயங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்து மீட்புபணிகளை மேற்கொள்ளவும், மழை காலத்தில் தொற்று நோய் பரவாமல் தடுத்திட தேவையான உயிர் காக்கும் மருந்துகளை இருப்பில் வைத்திடவும், குடிநீரினை காய்ச்சி பருகிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலந்து தினமும் பரிசோதித்து பொதுமக்களுக்கு வழங்கிடவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மழை காலங்களில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் சிறுபாலங்களை தூர்வாரி பராமரித்திடவும், பொதுப்பணித்துறையினர் தங்களின் கட்டுபாட்டில் உள்ள அணைகளின் மதகுகளை பராமரித்து இயங்கும் நிலையில் வைத்திடவும், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி நீர் வரத்தினை கண்காணித்திடவும், நீர் வெளியேற்றும் நிலை ஏற்படும் பொழுது ஆற்று கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மற்றும் தண்டோர மூலம்

அறிவிப்பு செய்திடவும், ஆறு, குளம், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை சீரமைத்திட தேவையான அளவு மணல் மூட்டையினை தயார் நிலையில் வைத்திடவும், மழை நீர் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைத்திட தேவையான அளவு சமுதாயக்கூடங்கள், பள்ளிகள், கல்யாண மண்டபங்களை தேவையான அளவு அடிப்படை வசதியுடன் தயார்நிலையில் வைத்திடவும்,மீட்பு பணிக்கு தேவைப்படும் படகுகளை தயார் நிலையில் வைத்திடவும், தினசரி மழையளவு விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் செய்திடவும், புயல்/வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளையும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் மற்றும் முதல் பொறுப்பாளர்கள் அடங்கிய குழு வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்;, ஒவ்வொரு குழுவைச் சார்ந்த அனைத்துத்துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக செயல்படுத்துவதற்கும், வடகிழக்கு பருவ காலத்தில் கனமழை ஏற்படின், அதனை எதிர்க்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருக்கவும் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(தேசிய நெடுஞ்சாலைத்துறை) திரு.ரமேஷ், பழனி சார் ஆட்சியர் டாக்டர்.உமா, இ.ஆ.ப., மாவட் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்