வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-03/2025
நாள்:-02.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.05.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பாடியூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.5.49 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் மற்றும் உயிரி உரம் தயாரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுாலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாடியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி பகுதிகளில் துாய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, தர்ப்பூசணி பழச்சாறு, மோர் போன்றவற்றை வழங்கி, துப்புரவுப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, வேல்வார்க்கோட்டை ஊராட்சி, இராஜகவுண்டன்பட்டியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.21 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களம், சேர்வைக்காரன்பட்டியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், வேல்வார்கோட்டையில் பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கானப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஞ்சாயத்து பவன் அலுவலக கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாயவிலைக்கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கானப்பாடியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது நுாலகக் கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீமத்கல்லியடி குருநாதர் மகளிர் சுய உதவி குழு சார்பில் கடலை மிட்டாய் தயாரிப்பு கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சிங்காரக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் சிங்காரக்கோட்டை முதல் காட்டுப்பட்டி வரை ரூ.86.47 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முத்துநாயக்கன்பட்டியில் வேடசந்துார் எஸ்ஆர்எஸ் வேளாண்மைக் கல்லுாரி மாணவ, மாணவிகள் இணையவழி பயிர் கணக்கெடுப்பு, நுண்ணீர் பாசனத் திட்டம், பயிர் பாதுகாப்பு குறித்து கள ஆய்வு மேற்கொள்வதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பட்டா வழங்குவது தொடர்பாகவும், அங்கன்வாடி மையம் அமைத்தல் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 189 வீடுகள் கட்டுமான பணிகளும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 220 வீடுகள் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தினை 2025-2026-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் முதற்கட்டமாக இதுவரை 258 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் வீடுகளை சீரமைக்க இதுவரை 25 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பாரதப் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 34 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2.40 இலட்சம், கழிப்பறை கட்ட தலா ரூ.12,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகள் எனில் அவர்களுக்கு கூடுதலாக ரூ.28,000 வழங்கப்பட்டு வீடுகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற திட்டங்கள் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சித் திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து துப்புரவுப்பணியாளர்களை காக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூய்மைப்பணியாளர்களுக்கு தினமும் இரு வேளைகளில் எலுமிச்சை பழச்சாறு, தர்ப்பூசணி பழச்சாறு, மோர், குழுக்கோஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் பழங்களை கொண்டு பழச்சாறு தயாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன், திரு.சுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய திட்டம்) திருமதி அமலா, வேடசந்துார் வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

..

.

.

.

.

.

.