மூடு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து நடத்திய வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2021
.

..

செ.வெ.எண்:-56/2021

நாள்:29.09.2021

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து நடத்திய வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் பார்வையிட்டார்.

திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குட்பட்ட அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் குளத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து நடத்திய வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.டி.வெங்கடரமணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.09.2021) பார்வையிட்டு, தெரிவித்ததாவது:-

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பேரிடர் ஏற்படும்போது பொதுமக்கள், கால்நடைகளை ஆபத்தான பகுதிகளிலிருந்து மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, உலர் உணவுகள், குடிநீர் மற்றும் ஆடைகளை தயாராக வைத்திருந்து, தண்ணீர் மற்றும் தீவனத்துடன் கால்நடைகள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது மேடான பகுதிகளுக்கோ கொண்டு செல்ல வேண்டும். நீர்நிலைகளில் ஆழம் தெரியாத அதிக நீரோட்டம் உள்ள இடங்களில் செல்வதை தவிர்த்து, மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளை முதலில் துண்டிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் மிகசிறப்பாக ஒத்திகை நடத்தியுள்ளனர். இதில் 2 மோட்டார் படகுகள் மற்றும் இதர மீட்பு கருவிகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்கள். இதனை பார்க்கும் போது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது, எந்தந்த இடங்களில் சாக்கடை அடைப்புகள் ஏற்படும் என்பதை கண்டறிந்து, அவற்றை சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அக்டோபர் 2-ந் தேதிக்குள் 100 சதவீதம் நிறைவடைந்துவிடும். இதனால் மக்களுக்கு வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல் நிலநடுக்கம் ஏற்படும்போது, பொதுமக்கள் வீட்டிற்கு வெளியில் இருந்தால் செங்கல், சுவர் பூச்சு, தொங்கும் விளம்பர பலகைகள், பாலங்கள், தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் மற்றும் பிற கட்டிட இடிபாடுகளுக்கு அருகில் நிற்காமல் அங்கிருந்து விலகி வெட்டவெளிக்கு செல்ல வேண்டும். பாதுகாப்பாக கட்டப்பட்ட கட்டிடம் அருகில் இருந்தால் அங்கேயே இருந்து, நிலநடுக்கம் அசைவின்போது, கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டாம்.

ஆறு, ஓடை, வாய்க்கால், குளம் போன்ற நீர்நிலைகளில் கனமழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் குடம், காய்ந்த மரக்கட்டுமரம், தண்ணீர் கேன் போன்ற மிதக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் பயணித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியும். எனவே தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பருவமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தயார் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு சாதனங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மாறன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திருமதி சந்தனமேரி கீதா, உதவி தீயணைப்பு அலுவலர் திரு.என்.சுரேஷ்கண்ணன், நிலை அலுவலர்கள் திரு.எஸ்.மயில்ராஜன், திரு.வி.மோகன், திரு.டி.விவேகானந்தன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.