மூடு

வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 05/09/2019
1

செ.வெ.எண்:-11/2019 நாள்:05.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு திட்டம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.09.2019) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2020-ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு, நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2020-க்கான முன் ஆயத்தப்பணிக்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 01.09.2019 முதல் 30.09.2019 முடிய சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது விபரங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ளவும், திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளவும் voters helpline என்ற கைப்பேசி செயலி அல்லது கூகுள்(GOOGLE) இணையதளத்தில் “nvsp” portal –இல்; வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையமும் செயல்படுகிறது. வாக்காளர்கள் அங்கும் வாக்காளர் பட்டியல் பதிவினை சரிபார்த்துக்கொள்ளலாம்.

மேலும்;, அலுவலக வேலை நாட்களில், மத்திய அரசின் Digital Seva மற்றும் மாவட்ட மின் ஆளுமை முகமை அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் பொது சேவை மையங்கள் (Common Service Centre), தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை(220) மையங்களில் பொதுமக்கள் விபரங்களை சரிபார்த்துக்கொள்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி(Toll Free) மூலமாக தொடர்புகொண்டு திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு பிரசுரம், மருத்துவமனைகள், கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வாரச்சந்தைகள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில்; சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு, சரிபார்ப்பு மற்றும் உறுதிமொழிப்படிவம் அனுப்பியும், பிரச்சார வாகனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.எல்.மதுபாலன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், வட்டாட்சியர்(தேர்தல்) திரு.சுப்பிரமணியபிரசாத், நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர்கள்(தேர்தல்), பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.