வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் இதுவரை 13,386 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன
செ.வெ.எண்:-39/2021
நாள்:16.11.2021
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் இதுவரை 13,386 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 01.01.2022-ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2022 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2022-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைதிருத்த படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் பெயர் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், அந்தந்த உதவி வாக்காளர் பதிவு அலுவலர்(வருவாய் வட்டாட்சியர்/மாநகராட்சி ஆணையர் / நகராட்சி ஆணையர்) அலுவலகங்கள், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம். அல்லது www.nvsp.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவோ, Voters Help Line என்ற கைப்பேசி செயலி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு வாக்காளர் சுருக்கத் திருத்தம் 2022-ன் போது, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் / பெயர் திருத்தம் / முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள், விண்ணப்பங்களை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் 13.11.2021 மற்றும் 14.11.2021 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை), ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட்டன. இந்த 2 நாள் சிறப்பு முகாமில் 13,217 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.11.2021 முதல் 14.11.2021 வரை மொத்தம் 13,386 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6 விண்ணப்பம்- 9,763, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 விண்ணப்பம் – 1,183, பிழைதிருத்த படிவம் 8 விண்ணப்பம் – 1,261, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் பெயர் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ விண்ணப்பம் – 1,179 வரப்பெற்றுள்ளன.
மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் வரும் 20.11.2021, 21.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 31.12.2003-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும், பரிசீலினை செய்து முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2022-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்து கொள்ளவும், புதியதாக சேர்க்க, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.