மூடு

வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்களை பரிசோதனை செய்ததில் 17 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2020

செ.வெ.எண்:-04/2020 நாள்:02.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்களை பரிசோதனை செய்ததில் 17 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்;.

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், மாவட்டத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய நபர்களை கண்காணித்து நோய் தொற்று வாய்ப்புள்ளோர்களை பரிசோதனை செய்ததில் 17 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகர பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியை சேர்ந்த ஐந்து நபர்கள், நிலக்கோட்டை கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் திண்டுக்கல் ஒன்றியம் தோமையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் என நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 17 நபர்களையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உரியவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் நபர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாதவண்ணம் பொது சுகாதார நெறிமுறைகளின்படி இப்பகுதிகளில் நோய் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கை (Containment Plan) மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இப்பகுதிகளில் பொது மக்கள் தேவையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. மேலும், நோய் தொற்று குறித்து பொது சுகாதார துறை களப்பணியாளர்கள் மூலம் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு ஆய்விற்கு வரக்கூடிய அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை பொது மக்கள் வழங்க வேண்டும். தமது குடும்பத்தில் எவருக்கேனும் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அதனை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பேகம்பூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும்வண்ணம் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடையுத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரக்கூடிய நபர்கள் சமூக விலகல் (Social Distancing) முறையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. நோய் தொற்று மேற்கண்ட பகுதிகளில் பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-