மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025
.

செ.வெ.எண்:-01/2025

நாள்:01.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி இன்று(01.05.2025) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன்பின்னர், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஜாதி, மதம் வேறுபாடு இன்றி செயல்படுத்தி வருகிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.18 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தில் கடந்த ஆண்டு 10,000 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைப் பணிகள் மேம்படுத்தப்பட்டன. நடப்பு ஆண்டில் 6,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 80 சதவீதம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,700 கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 2,250 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 1,250 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை சுமார் 3,300 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 1000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

ஆத்துார், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில், வைகை தண்ணீரை கொண்டு வருவதற்காக சுமார் ரூ.589 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு தேவையான அடிப்டை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி வைக்கப்படும். வீடு இல்லாத நபர்கள் அவைருக்கும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுவதுடன், வீடுகள் கட்டிதரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது உங்களுடைய அரசு. மக்களின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிளேன்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தலைமையில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, “திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கவும், ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்திற்கு நிகராக உயர்ந்திடவும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாட்டிற்கும், நான் உறுதுணைபுரிவேன்.

கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டும் கண்டறியவோ, கருணைக்கொலை செய்யவோ முயலமாட்டேன். நானும் எனது உறவினர்களும் எனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வோம். மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்வோம். குழந்தை திருமணத்தை நடத்தவோ, ஆதரிக்கவோ மாட்டோம். பெண் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்றங்கள் குறித்த தகவல்களையும் உரிய அலுவலர்களிடமோ, 1098 அல்லது 181 ஆகிய இலவச தொலைபேசி உதவி எண்கள் மூலமாகவோ கட்டாயம் தெரிவிப்பேன்.

பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க செய்வோம் என்றும், உளமார உறுதி அளிக்கிறேன்“ என அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட துாய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மேலும், கோடைகாலத்தை முன்னிட்டு துாய்மைப்பணியாளர்களுக்கு பழச்சாறுகள் வழங்கினார். மேலும், மகளிர் திட்டம் மூலம் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதியுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.குருமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், மாவட்ட சமூக நல அலுவலர் திரு.கோ.புஷ்பகலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தட்சணாமூர்த்தி, வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.