மூடு

1,94,958 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,313 மையங்கள் அமைக்கப்பட்டு, 5,276 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2022
.

.

செ.வெ.எண்:-47/2022

நாள்:24.02.2022

1,94,958 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,313 மையங்கள் அமைக்கப்பட்டு, 5,276 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 27.02.2022 அன்று முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(24.02.2022) நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், பணிக்குத் தேவையான பணியாளர்களை தயார்நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்த ஆண்டு 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே தவணையாக நடத்தப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,313 மையங்களில் 27.02.2022 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 0-5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மந்நும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் மையங்களிலும், 28 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 51 போக்குவரத்து முகாம்களிலும் ஒரே தவணையாக போலிசோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 5,276 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,94,958 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டுமருந்து அளித்திருந்தாலும், இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டுமருந்து வழங்கி, பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.அன்புச்செல்வன், துணை இயக்குனர்(குடும்ப நலம்) மரு.பூங்கோதை, துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்-திண்டுக்கல்) மரு.மு.வரதராஜன், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள் -பழனி) மரு.வி.யசோதாமணி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.