Close

TAHDCO Scheme

Publish Date : 09/06/2022

செ.வெ.எண்:-21/2022

நாள்:07.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

தாட்கோ திட்டங்களில் பயன்பெற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர்(ம)பழங்குடியினர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1974 முதல் இம்மக்களது பொருளாதார நிலை உயர்த்தப்பட்டால் தான் சமூக அளவிலான வளர்ச்சி பெரும் என ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு நிறுவனம் ‘ஆதிதிராவிடர் வீட்டுவசதி (ம) மேம்பாட்டுக் கழகம் “ தாட்கோ ஆகும்.

இத்துறையானது தொழில்முனைவோருக்கான கடன் திட்டம் EDP (Entrepreneur Development Programe) என்ற திட்டம் மூலம் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் பயன்பெறலாம். இத்திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.25 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் பெற்று தொழில் தொடங்கலாம். மொத்த திட்ட தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2,25,000 வரை முன்விடுவிப்பு மானியம் வழங்கப்படுகிறது. மொத்த திட்ட தொகையில் 5 சதவீதம் பங்குதாரர் விண்ணப்பதாரர் தொகை செலுத்தப்பட வேண்டும். www.tahdco.com மூலமாக தாட்கோவின் அனைத்து திட்டங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளலாம். தாட்கோ திட்டத்தில் பயன்பெற விரும்பபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, இந்து ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சாதிச் சான்றிதழ், வருமான சான்று (ரூ.2 இலட்சத்திற்குள்), தொழில் செலவினத்திற்கான GST தொகையுடன் GSTIN சரக்கு சேவை – நிறுவன அரசு வணிகத்துறை பதிவெண்ணுடன் கூடிய விலைப்புள்ளி, தாங்கள் தொழிலுக்கான முதலீட்டு தொகை மற்றும் தளவாடங்கள் கடை, கால்நடை, கோழி, மீன் பண்ணை அமைக்கப்படும் செலவினங்கள, நிகர லாபம், வங்கிகளுக்கு மாதம் தோறும் செலுத்த வேண்டிய உத்தேச தொகை மற்றும் தொழில் வாய்ப்புக்கான ஆதாரங்களுடன் கூடிய திட்ட அறிக்கை (Project Report) தயார் செய்து, 5 வருட கடை, நிறுவன வாடகை ஒப்பந்த ஆவணம், அனுபவம் இவற்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வயதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Aadhar Card, TC, Mark sheet, PAN CARD) புகைப்படம், இவற்றுடன் http://application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் தாட்கோ தேர்வுக்குழு (Task Force Committee) மூலம் பயனாளிகள் நேர்காணலில் தேர்வு செய்யப் பெற்று, விண்ணப்பங்கள் தங்கள் சேவைப்பகுதி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, வங்கி மேலாளர் தல ஆய்வு செய்து படிவம்-3 பெற்று, மானிய பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு, வங்கி கடன் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.