Close

Tamil Development Department

Publish Date : 08/11/2021

செ.வெ.எண்:-12/2021

நாள்:08.11.2021

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி

இந்திய நாட்டிற்கு உழைத்த தலைவர்களில் ஒருவரான, இந்தியாவின் மேனாள், தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இவ்வறிவிப்பிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 12.11.2021 வெள்ளிக் கிழமையன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகள் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) மற்றும் அனைத்துப் பள்ளிகள் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்பள்ளிகள் (பதின்மப் பள்ளிகள் உள்பட) பயின்று வரும் மாணாக்கர்களுக்கு தனித்தனியே அரசு விதி முறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், பேச்சுப்போட்டி திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000-மும், மூன்றாம் பரிசாக ரூ.2000-மும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும், பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணாக்கர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகையாக ரூ.2000-மும் தனியே வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 12.11.2021 அன்று முற்பகல் 9.30 மணி தொடங்கியும், கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2.00 மணி தொடங்கியும் நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும். பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் முதற்கண் கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் நடத்தப்பெற்று, அதில் தெரிவு செய்யப்பெற்ற மாணாக்கர்கள் மட்டுமே மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்க முடியும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படும் மாணாக்கர்கள் போட்டி நாளன்று உரிய பரிந்துரைப் படிவத்தை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (தொலைபேசி எண் 0451-2461585) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.