Tamil Development – Tamil Official Language Act
செ.வெ.எண்:-53/2023
நாள்:24.02.2023
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒருவார காலத்திற்கு (01.03.2023 முதல் 08.03.2023 வரை) ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 01.03.2023 முதல் 08.03.2023 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் முதல் நாள் நிகழ்வாக 01.03.2023 அன்று காலை 09.30 மணியளவில் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலத்திலிருந்து தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை வந்தடையவுள்ளது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 02.03.2023, 03.03.2023 07.03.2023 ஆகிய 3 நாட்களில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச் சட்டம்/வரலாறு, அரசாணைகள், மொழிப்பயிற்சி, மொழிப் பெயர்ப்பும், கலைச் சொல்லாக்கம் முதலிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சட்ட வாரவிழா நிகழ்வின் தொடர்ச்சியாக 04.03.2023 அன்று மாலை 6.00 மணியளவில் வத்தலகுண்டிலுள்ள பேரூராட்சி அலுவலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சமுதாயக்கூடத்தில் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப் பலகை அமைத்திட வலியுறுத்தி கூட்டமும், அதனைத் தொடர்ந்து 06.03.2023 அன்று முற்பகல் ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஆட்சி மொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாள் நிகழ்வாக 08.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு பொதுமக்கள் ஆட்சிமொழி சட்டத்தை அறியும் வகையில் திண்டுக்கல் மாவட்ட மையநூலகக் கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.