Close

Tamil Valarchi Thurai – Competition

Publish Date : 29/07/2019

செ.வெ.எண்:73/2019 நாள்:-27.07.2019

திண்டுக்கல் மாவட்டம்பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக ஆண்டுதோறும் 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையேயும், கல்லூரி மாணவ, மாணவியர்களிடையேயும் தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்த்திடும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 7.8.2019-ஆம் நாளன்றும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 9.08.2019 நாளன்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளன.

11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை அவரவர் பயிலும் பள்ளித்தலைமையாசிரியாடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவரவர் பயிலும் பள்ளித்தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் வரப்பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை அவரவர் பயிலும் கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவரவர் பயிலும் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் வரப்பெற்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

இப்போட்டிகளில் பங்குபெறவுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெயர்களை அவரவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் அனுமதி கடிதத்துடனும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெயர்களை அவரவர் பயிலும் கல்லூரி முதல்வர் அனுமதி கடிதத்துடன் திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0451-2461585-இல் 5.08.2019-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

போட்டிகளுக்கான தலைப்புகள் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து மூடி முத்திரையிடப்பட்ட உறைகளில் வரப்பெறும். போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடுவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முன்னிலையில் இவ்வுறைகள் பிரிக்கப்பட்டு போட்டி தலைப்புகள் அறிவிக்கப்படும். மூன்று போட்டிகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்,

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்