Tamilvalarchi – Competition
செ.வெ.எண்:-21/2023
நாள்:-07.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிளுக்கனா பேச்சுப்போட்டிகள் 15.11.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை(நவம்பர் 14) முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 15.11.2023 அன்று(புதன்கிழமை) முற்பகல் 10.00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், அதே நாளான்று பிற்பகல் 02.00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் பள்ளி (6-12ஆம் வகுப்பு வரை), கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு, 1) சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், 2) ஆசிய ஜோதி, 3) மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டி நடத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு 1)சுதந்திரப் போரட்டத்தில் நேரு, 2) பஞ்சசீல கொள்கை, 3) நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படும்.
பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடனும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடனும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
கல்லூரி பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.