Close

Tamilvalarchi Competition

Publish Date : 19/05/2022

செ.வெ.எண்:-28/2022

நாள்: 17.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 03.06.2022 அன்று கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல்அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின்படி 2022-ஆம் ஆண்டு ஜுன் 03ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வுகள் நடப்பதால் அவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தும் நாள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தமிழ்வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 03.06.2022 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி காலை 10.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ளலாம்.

இப்பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என்ற வகையில் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.