Close

Tamilvalarchi Dept (Competition)

Publish Date : 24/09/2021

செ.வெ.எண்:-47/2021

நாள்:-24.09.2021

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைச் செயல்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ஆம் நாளான மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளையொட்டியும், நவம்பர் 14ஆம் நாளான ஜவகர்லால்நேரு அவர்களின் பிறந்த நாளையொட்டியும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

இவ்வறிவிப்பிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 02.10.2021 அன்று திண்டுக்கல் எம்.வி.எம். (எம்.வி.முத்தையா) அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்க்கு பேச்சுப் போட்டிகள் (அரசு அறிவித்துள்ள விதி முறைகளின் படியும், சமூக இடைவெளியைபின் பற்றியும்) நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்படும், இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என்ற வகைப்பாட்டில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரு வரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரு.2000 வீதமும் வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்க்கான போட்டி 02.10.2021 அன்று முற்பகல் 10 மணியிலிருந்தும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டி பிற்பகல் 2.30 மணியிலிருந்தும் நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் (ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்து இருவர் மட்டும்) இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது 0451 – 2461585 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.