Close

Tamilvalarchi-Thirukural

Publish Date : 06/11/2023

செ.வெ.எண்:-08/2023

நாள்:-03.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது.

‘திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் எடுத்துக்கொள்ளப்படும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று குறள் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது.

திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்திலோ(www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0451-2461585 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் 30.11.2023-ஆம் தேதிக்குள் ”மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.