TH Food and Civil Supply Minister -The World Environment Day – Oddanchatram

செ.வெ.எண்:-11/2025
நாள்:-05.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப்பாதையில் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணியை இன்று(05.06.2025) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்றப் பின்னர் தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் வனப்பரப்பு 33 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23 சதவீதமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் வனப்பரப்பை 10 சதவீதம் உயர்த்தி 33 சதவீதமாக மாற்றி பசுமை மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், மரத்தை வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று கூறினார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் 1989-90-ஆம் ஆண்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் விதைகள் துாவப்பட்டன.
அந்த வகையிலே, தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை சென்னையில் இன்று(05.06.2025) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குழந்தை வேலப்பர் கோயில் வளாத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப்பாதை ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது. அந்த கிரிவலப்பாதை பகுதிகளில் தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை வேலப்பர் கோயிலுக்கு செல்ல பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த பாதையிலும் சுமார் 3000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் தொடர்ந்து நடவு செய்யப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் இடையக்கோட்டை பகுதியில் 2022-ஆம் ஆண்டு 117 ஏக்கர் பரப்பளவில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, உலக சாதனை படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 40 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 ஏக்கரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சுமார் 30 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இன்னும் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படவுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 25 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. சன்முகாநதி, நல்லதங்காள் ஆறு மற்றும் நங்காஞ்சியாறு ஆகிய பகுதிகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய நகராட்சிப் பகுதியில் நமக்குநாமே திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய தலா ரூ.ஒரு கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருங்கால சந்ததியினர் சுகாதாரமான சுற்றுச்சூழலை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். வீட்டை துாய்மையாக பராமரிப்பது போல், சுற்றுபுறத்தையும் துாய்மையாக வைத்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.
பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள், மக்களிடம் செல், மக்களுடன் பழகு, மக்களை நேசி, மக்களுடன் இணைந்து காரியங்களை செயல்படுத்து என்று சொன்னார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பராமரிப்பு என்பது மக்களுடன் இணைந்து செயல்படுத்தும்போதுதான் அதற்கு முழுமையான பலன் கிடைக்கும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்ய உலக சுற்றுச்சூழல் தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று காடுகள் பரப்பை அதிகப்படுத்தவும், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள்.
இயற்கை நமக்கு மிகவும் முக்கியம். இயற்கை வளங்களை பாதுகாப்பது அனைவரது கடமையாகும். வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியமானது. இதுகுறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓர் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் “மாஸ்கிளீனிங்“ பணி இன்று மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, வனத்துறை அலுவலர்கள், கிருபா பவுண்டேசன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.