Close

The Hon’ble Rural Development Minister-Sithaiyankottai-schemes

Publish Date : 16/06/2025
.

செ.வெ.எண்:-46/2025

நாள்:14.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ3.48 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ3.48 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(14.06.2025) அடிக்கல் நாட்டி, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு நிதித் திட்டம், மாநில நிதி ஆணையம் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 இடங்களில் தார்ச்சாலை பணிகள் ரூ.2.27 கோடி மதிப்பீட்டிலும், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் முத்தாலம்மன் கோயில் தெருவில் சமுதாயக்கூடம் அமைத்தல், மூலதன மானியத் திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானியத் திட்டம் ஆகியவற்றின் கீழ், ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஜாதி, மதம் வேறுபாடு இன்றி செயல்படுத்தி வருகிறார். முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை என்ற நிலை யாருக்கும் இருக்கக்கூடாது, அதை அகற்றிட வேண்டும், அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களுக்கு என்ன தேவைகள் என்பதை அறிந்து அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சித் தலைவர் திருமதி மு.போதும்பொன்னு, துணைத்தலைவர் திரு.மு.ஜாகிர்உசேன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.இரா.இராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் திருமதிஜெயமாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.