Close

The Hon’ble Chief Minister One Year Achievement

Publish Date : 09/05/2022
.

செ.வெ.எண்:-11/2022

நாள்: 07.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று, ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேடு வெளியீட்டு விழா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.05.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு சிறப்பு கையேட்டினை வெளியிட்டு, தெரிவித்ததாவது:-

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்“ தற்போது “முதல்வரின் முகவரி“ திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 35,952 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 23,391 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 1479 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,96,606 பயனாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 60 முகாம்கள் நடத்தப்பட்டு, நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 60,905 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசு மருத்துவமனைகள், 18 தனியார் மருத்துவமனைகளில் 1963 பயனாளிகள் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட 32,83,829 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணையாக 13,862 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 11,591 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தின் கீழ் 4965 சுகாதாரப்பணியாளர்கள், 10,084 முன்களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 10,264 நபர்கள் என மொத்தம் 25,313 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் 1067 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ரூ.12.48 கோடி காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா சிறப்பு நிவாரண உதவிகள் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,26,171 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.250.46 கோடி வழங்கப்பட்டுள்ளது. 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 6,26,171 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5,00,000 வைப்பீடு வழங்கும் திட்டத்தில் 3 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3,00,000 வழங்கும் திட்டத்தில் 260 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

திருக்கோயில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருகால பூஜை திருக்கோயில்களில் பணிபுரியும் 180 பூசாரிகளுக்கு ரூ.1000 மாத ஊக்கத்தொகையாக ரூ.1.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லா கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 85 அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.4000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 290 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.204.15 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, 53,676 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் ரூ.33.33 கோடி மதிப்பீட்டில் 5,907 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 1,16,018 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 7,692 பெண் தன்னார்வலர்கள், 17 ஆண் தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேசிய முதியோர் ஓய்வூதியம் ரூ.31.80 கோடி மதிப்பில் 26,497 நபர்களுக்கும், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.14.62 கோடி மதிப்பில் 12,184 நபர்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதிம் ரூ.0.58 கோடி மதிப்பில் 485 நபர்களுக்கு, 50 வயதைக் கடந்த திருமணமாகாத ஏடை பெண்களுக்கு ஓய்வுதியமாக ரூ.1.30 கோடி மதிப்பில் 1,162 நபர்களுக்கும், ஆதரவற்ற விதவைத் தாய்மார்களுக்கு ஓய்வூதியம் ரூ.20.32 கோடி மதிப்பில் 16,930 நபர்களுக்கும், முதலமைச்சர் உழவர பாதுகாப்புத்திட்ட ஓய்வூதியம் ரூ.11.65 கோடி மதிப்பில் 9,457 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் 6,69,028 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 936 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.நமக்கு நாமே திட்டத்தில் ரூ.4.28 கோடி மதிப்பில் 18 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 3596 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 ம் வகுப்பு படித்த 1469 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.3.67 கோடி திருமண நிதியுதவியும், ரூ.5.40 கோடி மதிப்பிலான 11.752 கிலோகிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 2031 பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.10.15 கோடி திருமண நிதியுதவியும், ரூ.7.47 கோடி மதிப்பிலான 16.248 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் இதுவரை 3.10 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், திருநங்கைகள் 16,047, மாற்றுத்திறனாளிகள் 2,66,641 நபர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 5 கல்லுாரிகள் மற்றும் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வித் தரம் மேம்பாடு அடையும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்டத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகளுடன் புதிதாக மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

21 நாட்களில் 605 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு, 4 நிறுவனங்களால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 10.30 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும். மேலும், சிறுமலையில் ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரத்தை கருத்தில் கொண்டு அங்கு ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சுழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் சுற்றுலாப்பகுதியில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு, இன்னும் எவ்வளவு குடிநீர் தேவைப்படுகிறது என்பது குறித்து துள்ளியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களை மேம்படுத்தும் வகையில், ஆழியாறு நதியை ஆதாரமாகக் கொண்டு ரூ.930 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் மற்றும் ரூ.95.5 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதுதவிர மேலும், 2 குடிநீர் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னிவாடி பகுதியில் குட்டைபொம்மன் என்ற யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்துவிடுகிறது. அந்த யானையை கட்டுப்படுத்த கலீம் மற்றும் சின்னதம்பி என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜே.பெருமாள்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) திரு.அ.இளையேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.