Close

The Hon’ble CM – AD Handloom

Publish Date : 27/01/2024

செ.வெ.எண்:-54/2024

நாள்:-23.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை திட்டத்தின் கீழ், திண்டுக்கல் பயனாளி நிறுவனத்திற்கு மாநில அரசின் சார்பில் 10 விழுக்காடு கூடுதல் மானியத்தொகைக்கான ரூ.54,97,998-க்கான காசோலை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை திட்டத்தின் கீழ், 10 விழுக்காடு மாநில அரசின் கூடுதல் மானியத் தொகையினை பெற திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி பெற்ற இரண்டு நிறுவனங்களில் திண்டுக்கல் கவின்கங்கா வீவிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்திற்கு ரூ.54,97,998-க்கான காசோலையினை சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.

தொழில்மயமாக்கலுக்கான சாதகமான வணிகச் சூழல், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சட்டம் மற்றும் ஒழுங்கு, இணக்கமான தொழில் உறவுகள் மற்றும் ஆரோக்கியமான சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவற்றின் காரணமாக, இந்திய மாநிலங்களுக்கிடையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதோடு முதலீட்டாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெடுப்புகளால் தொழில்துறையில் வெளிநாடு மற்றும் உள்நாடு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதோடு ஏற்றுமதிக்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நம் நாட்டின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் ஜவுளித் தொழில் மதிப்பு 7 விழுக்காடு மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடு ஆகும். மேலும், நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 15 விழுக்காடு பங்களிப்பினை ஜவுளித் துறையானது வழங்கி வருகிறது. ஜவுளித் தொழிலில் 4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மாநிலம் இந்திய ஜவுளித் தொழிலில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும், நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதப்படுத்துதல், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழில் போன்ற தொழில்துறையின் அனைத்து துணைத் துறைகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு, நூற்புத் திறனில் 46 விழுக்காடு, நூல் ஏற்றுமதியில் 60 விழுக்காடு, விசைத்தறி உற்பத்தியில் 20 விழுக்காடு, கைத்தறி உற்பத்தியில் 12 விழுக்காடு, பின்னலாடை தயாரிப்பில் 70 விழுக்காடு என ஜவுளித் துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. மேலும், சுமார் 31 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கி, ரூ.50,000 கோடி மதிப்பிலான ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

அவ்வகையில், கைத்தறி, விசைத்தறி, நூற்பு, பதப்படுத்துதல் உள்ளிட்ட நவீன, துடிப்பான, ஒருங்கிணைந்த மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஜவுளித் துறையை உருவாக்கவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக செலவு குறைந்த மற்றும் உயர்தர ஜவுளி ஆடைகள் உற்பத்தி செய்யவும், புதுமை, பன்முகத்தன்மை, மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு பல்வேறு இயங்களின்கீழ் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கொள்கையின்படி, விசைத்தறி பிரிவில் புதிய நாடா இல்லாத தறி (Shuttless Loom) மற்றும் நெசவு முந்தைய பணிகளுக்கான தயாரிப்பு இயந்திரம் (Preparatory Machine) கொள்முதல் செய்து, ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின்கீழ் (Amended Technology Upgradation Fund Scheme) 10 விழுக்காடு மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு, மாநில அரசின் சார்பில் 10 விழுக்காடு கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும்.

இதனடிப்படையில், புதிய நாடா இல்லாத தறி (Shuttless Loom) மற்றும் நெசவு முந்தைய பணிகளுக்கான தயாரிப்பு இயந்திரம் (Preparatory Machine) கொள்முதல் செய்து, ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின்கீழ் (Amended Technology Upgradation Fund Scheme) 10 விழுக்காடு மானியம் பெற்ற நிறுவனங்களில் 17 நிறுவனங்களுக்கு மாநில அரசின் சார்பில் 10 விழுக்காடு கூடுதல் மானியத்தொகை ரூ.9.25 கோடி வழங்க அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திண்டுக்கல் கவின்கங்கா வீவிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்திற்கு ரூ.54,97,998 மற்றும் ஷட்கான் பேப்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.4,63,613 என மொத்தம் ரூ.59,61,611 (ரூபாய் ஐம்பத்து ஒன்பது இலட்சத்து அறுபத்து ஒன்றாயிரத்து அறுநூற்றி பதினொன்று மட்டும்) 10 விழுக்காடு கூடுதல் மானியத் தொகையாக அனுமதித்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி பெற்ற இரண்டு நிறுவனங்களில் திண்டுக்கல் கவின்கங்கா வீவிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்திற்கு ரூ.54,97,998-க்கான காசோலையினை வழங்கி சிறப்பித்துள்ளார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.