Close

The Honb’le CM- VC function DPIU-Mahalir Thittam-Hon’ble ministers Co op and Food distribute at Dindigul

Publish Date : 14/12/2021
.

செ.வெ.எண்:37/2021

நாள்:14.12.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை காணொலி காட்சி வாயிலாக வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,408 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 43,920 உறுப்பினர்களுக்கு ரூ.155.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 7.22 இலட்சம் குழுக்களுக்கு, ரூ.1,04,013 கோடி வங்கிக் கடனாக வழங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

>மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் இன்று(14.12.2021) நடைபெற்ற விழாவில், 1,730 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.105 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன்கள், நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி, சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும்,

சுய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் மற்றும் பிற திட்ட உதவிகள் விவரம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52,574 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,83,462 பயனாளிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரு.2,485.96 கோடி வங்கிக் கடன் மற்றும் 30 இ-சேவை மையங்கள் துவக்குவதற்காக 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய தொழில் தொடங்க தொழிற்கடனாக நகர்ப்புறத்தைச் சேர்ந்த 931 குழுக்களுக்கு ரூ.26.60 கோடி, 1,381 தனி நபர்களுக்கு ரூ.16.09 கோடி, 4,702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் துவங்கிட வங்கி கடனாக ரூ.219.37 கோடி வழங்கப்பட்டது.

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில், திறன், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தர முதல் கட்டமாக 69 சமுதாயத்திறன் பள்ளிகள் தொடங்க ரூ.66 இலட்சம் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில் நுட்ப பயிற்சிகளும், உற்பத்தி செலவினைக் குறைத்து, வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகளும் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் துவங்க ரூ.26 இலட்சம், உற்பத்தியாளர் குழுக்களுக்கான துவக்க நிதியாக 90 குழுக்களுக்கு ரூ.68 இலட்சம் மற்றும் தொழிற்குழுக்களுக்கான துவக்க நிதியாக 30 குழுக்களுக்கு ரூ.23 இலட்சமும் வழங்கப்பட்டது.

திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போலவே, இணையாக இதேநேரத்தில் அனைத்து இதர மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பயனாளிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. மஹாலில் இன்று(14.12.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 3,408 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 43,920 உறுப்பினர்களுக்கு ரூ.155.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) திரு.நா.சரவணன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், உதவித்திட்ட அலுவலர்(மகளிர் திட்டம்) திரு.எஸ்.என்.அழகப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சி.புஷ்பகலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜே.பெருமாள்சாமி, கூட்டுறவு கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.கோ.க.மாதவன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் திரு.வேல்முருகன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.