The Hon’ble CM -VC-Palani Kovil

செ.வெ.எண்:-79/2025
நாள்:-27.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கொளத்தூரிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று(27.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலானது அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகவும், தமிழ்நாட்டின் முதன்மை திருக்கோயிலாகவும் திகழ்கிறது. இத்திருக்கோயிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் உட்பட பல்வேறு திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாக்களின்போது, அண்டை நாடுகள், அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவை தவிர இத்திருக்கோயிலின் கீழ் மூன்று கலைக்கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, ஒரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒரு தொடக்கப்பள்ளி, சிறுவர் மற்றும் சிறுமியர் கருணை இல்லங்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி நிலையம், அர்ச்சகர் பயிற்சி பள்ளி, வேத ஆகம பாடசாலை ஆகிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், நாள் முழுவதும் இலவச பஞ்சாமிர்த பிரசாதம், நீர், மோர் அல்லது சுக்கு காபி வழங்குதல், கைக்குழந்தைகளுக்கு காய்ச்சிய பசும் பால் வழங்குதல், மனநல காப்பகம், சித்த மருத்துவமனை, முதலுதவி சிகிச்சை மையங்கள், முடி காணிக்கை செலுத்துமிடங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபங்கள், சுற்றுலா பேருந்து நிலையங்கள், கிரிவீதியில் மின்கல ஊர்திகள் ஆகிய வசதிகள் கட்டணமில்லாமல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திருக்கோயில் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இத்திருக்கோயிலைச் சார்ந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாமல் காலைச்சிற்றுண்டி மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2021-2022-ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி வட்டம், பழனி கிராமம், அய்யம்புள்ளி ரோடு, (சிவகிரிப்பட்டி ஊராட்சி) 38,750 சதுர அடி பரப்பளவில் 25 அறைகளுடன் குளியலறை மற்றும் கழிப்பறை, உணவு அருந்தும் அறை, 130 நபர்களுக்கான இடவசதியுடன் ஹால், நடைபாதை வசதியுடன் பூங்கா, சமையல் அறை, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை, சரக்கு அறை, நூலகம், மருந்தகம், தண்ணீர் வசதிகள், சுகாதார ஏற்பாடுகள், மின் வசதிகள் ஆகிய வசதிகளுடன் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுாவமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுாவமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியன், பழனி நகர்மன்ற தலைவர் திருமதி உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் திரு.கந்தசாமி, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.